பொருநராற்றுப்படை– அறிமுகம்

 

பொருநராற்றுப்படைஅறிமுகம்

 

தமிழ் மொழியின் தொன்மை

இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்.  இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, மூன்று முதல் 140 அடிகளுடைய பாடல்களில் சிறந்தவற்றை,  எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். அந்த எட்டு நூல்கள்: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு. எட்டுத்தொகை என்ற சொல் இந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த சிறந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்தொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன.

 

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

பத்து நூல்களாக்கினார்கள். பத்துப்பாட்டில் உள்ள நூல்கள்:

1.      திருமுருகாற்றுப்படை,

2.      பொருநராற்றுப்படை,

3.      சிறுபாணாற்றுப்படை,

4.      பெரும்பாணாற்றுப்படை,

5.      முல்லைப்பாட்டு,

6.      மதுரைக் காஞ்சி,

7.      நெடுநெல்வாடை,

8.      குறிஞ்சிப்பாட்டு,

9.      பட்டினப்பாலை,

10.  மலைபடுகடாம்.  

இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை,பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[2] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக்காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நான்கும் அகத்திணையைச் சார்ந்தவை.

பொருநராற்றுப்படை

பொருநர் என்போர் வேறொருவரைப்போல் வேடம் அணிந்து நடிக்கும் கலைஞர்கள் ஆவர். இவர்கள் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர்[3] என மூவகையினர். இப்பாட்டில் வரும் பொருநன், “வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணி கரிகால் வளவன்என்று கரிகால் வளவன் போரில் வெற்றி பெற்றதைப் பற்றிப் பாடுவதால், அவன் போர்க்களம் பாடும் பொருநன் என்று தெரிகிறது. இப் பாட்டில், கரிகால் வளவனிடம் பரிசு பெற்ற பொருநன் பரிசளிப்பவர்களைத் தேடி அலையும் பொருநனைக் கரிகால் வளவனிடம் ஆற்றுப்படுத்துவதால் இப் பாட்டு பொருநராற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.

பொருநராற்றுப்படை ஆசிரியப்பா அடிகளும் வஞ்சிப்பா அடிகளும் கலந்த 248 அடிகளைக்கொண்ட பாட்டு. இப் பாட்டை இயற்றியவர் முடத்தாமக் கண்ணியார். இவர் பெண்பாற் புலவர் என்று ஒரு சிலரும், ஆண்பாற் புலவர் என்று வேறு சிலரும் கருதுகின்றனர். பொருநராற்றுப்படையைத் தவிர, இவர் இயற்றியதாக எந்தப் பாடலும் கிடைக்கவில்லை.  கருங்குழலாதனார், வெண்ணிக்குயத்தியார், உருத்திரங் கண்ணனார் ஆகியோர் முடத்தாமக் கண்ணியாரோடு ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்று பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார்[4] தம் நூலில் குறிப்பிடுகிறார். பொருநராற்றுப்படை இயற்றப்பட்ட காலம் ஏறத்தாழக் கரிகாலன் (கி. பி. 75 – 115) காலத்தை சர்ந்தது என்று மா. இராசமணிக்கனார்[5] குறிப்பிடுகிறார்.

இப் புலவரின் பெயர் தொல்காப்பிய உரையாசிரியர் சேனாவரையரால் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி
பலர்க்கு உரிய எழுத்தின் வினையொடு முடிமே.

 (தொல். சொல். இடை. நூ. 21)

என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார இடையியல் நூற்பா உரையில் ஆர் விகுதி பன்மையோடு முடிதற்கு, ‘முடத்தாமக் கண்ணியார் வந்தார்’ என்று எடுத்துக் காட்டப்பட்பட்டிருப்பதால் இவரின் இயற்பெயர் முடத்தாமக் கண்ணி என்று கருதுவார் உ.வே.சா. இவர் பெயரின் முன்னர் முடம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதனால் இவர் உறுப்பு முடம்பட்டவர் என்று கருதுவாருமுண்டு. ஆற்றுப்படை இலக்கிய வகையில் பொருநராற்றுப்படையே முதல் நூல் என்று கருதப்படுகிறது. புதிய இலக்கிய மரபினை உருவாக்கும் துணிவும் இலக்கியப் பயிற்சியும் முடத்தாமக் கண்ணியாரிடம் மிக்கிருந்தமைக்கு இந்நூலே சான்று. அகவல் அடியால் பாடப்பட்ட பொருநராற்றுப்படையின் இடைஇடையே பயில் - வார்க்குச் சலிப்பு தோன்றா விதத்திலும் ஓசைநலத்தை மிகுவிக்கும் நோக்கிலும் வருணனைப் பகுதிகளில் வஞ்சி அடிகளை விரவிப் பாடியுள்ள புலவரின் புலமைநலம் பாராட்டுதற்குரியது.

இப் பாட்டில், பொருநன் ஓருவன் ஓரூர் விழாவில் தம் கலைத்திறனைக் காட்டியபின் வேறூர் செல்லல், பாலையாழ் வருணனை, பாலைப் பண்ணைக் கேட்டு ஆறலைக் கள்வர் தம் கொடுஞ்செயலைக் கைவிட்டு அருளுடையர் ஆதல், முடிமுதல் அடிவரை விறலியைப் பற்றிய வருணனை, கரிகாலன் உணவும், உடையும் உறைவிடமும் அளித்துப் பொருநனை உபசரித்தல், பரிசளித்தல், காவிரியின் வளம் முதலியன விரிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கின்றன.  குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்குவகை நிலங்களும் ஒன்றுசேர்ந்த சோழநாட்டின் நிலவளமும் காவிரி ஆற்றின் நீர்வளமும் இப்பாட்டில் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கின்றன. பொருநாராற்றுப்படை பல உவமை நயங்களுடன் கூடிய சிறந்த பாட்டு; கற்பவர்களின் உள்ளத்தைக் கவரும் இனிய பாட்டு.



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

[3] . போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை அழித்து வென்ற வீரனைப் புகழ்ந்து பாடுதல் பரணி பாடுதல் என்று அழைக்கப்படுகிறது.

[4]. பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார்.  பொருநராற்றுப்படை மூலமும் உரையும் (பக்கம் – 4), திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை.

[5] . பேரா. காவ்யா சண்முகசுந்தரம் (தொகுப்பாசிரியர்), சங்க இலக்கிய வரலாறுமா. ரா. களஞ்சியம் III, காவ்யா பதிப்பகம்

Comments

Popular posts from this blog

பொருநராற்றுப்படை – மூலமும் உரையும்

பொருநராற்றுப்படை – பொருட்சுருக்கம்