பொருநராற்றுப்படை – மூலமும் உரையும்

 

பொருநராற்றுப்படை – மூலமும் உரையும்

பொருநனை விளித்தல்

அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்,

சாறு கழி வழி நாள், சோறு நசை உறாது,

வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந!

 

அருஞ்சொற்பொருள்:

1. அறாஅ இடையறாத; யாணர் புதிய வருவாய்; அகன் - அகன்ற; தலை - இடம்; பேர் ஊர்பெரிய ஊர்

2. சாறு - விழா; கழி கழிந்த (முடிந்த); வழி நாள் - மறுநாள்; நசை உறாது விரும்பாமல்

3. புலம் - ஊர்; முன்னிய செல்ல விரும்பிய; விரகு உபாயம்; அறி - அறிந்த; பொருந பொருநனே

 

பதவுரை:

1. அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர் - இடையறாத வருவாயினையுடைய அகன்ற இடங்களையுடைய பெரிய ஊர்களில்

2. சாறு கழி வழி நாள், சோறு நசை உறாது - விழா முடிந்த அடுத்தநாளில், அங்குக் கிடைக்கும் சோற்றை விரும்பாமல்,

3. வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந! - வேறு ஊர்களுக்குச் செல்ல விரும்பும் உபாயத்தை அறிந்த பொருநனே!

 

கருத்துரை:

இடையறாத வருவாயையும் அகன்ற இடங்களையும் உடைய பெரிய ஊரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்று பலவகை உணவுகளை உண்டு, விழா முடிந்த மறுநாள், உணவில் விருப்பம் இல்லாமல், வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பும் உபாயங்களை அறிந்த பொருநனே!

 

பாலையாழின் அமைப்பு

 

குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல்

விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை                5

எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று

ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப்

பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை

அளைவாழ் அலவன் கண்கண் டன்ன

துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி                     10

 

 

எண்ணாள் திங்கள் வடிவிற்று ஆகி

அண்நா இல்லா அமைவரு வறுவாய்

பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின்

மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும்

கண்கூடு இருக்கை திண்பிணித் திவவின்                15

ஆய்தினை அரிசி அவையல் அன்ன

வேய்வை போகிய விரல்உளர் நரம்பின்

கேள்வி போகிய நீள்விசித் தொடையல்

மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன

அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி                20

ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை

 

அருஞ்சொற்பொருள்:

4. குளப்பு குளம்பு என்பது திரிந்து குளப்பு என்று ஆகியது.  குளம்புவிலங்கின் பாதம்; அன்ன - போல; கவடு பிளவு; கவடுபடுதல் இருபக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்து இருத்தல்; பத்தல் - யாழின் குடம்

5. அழல்உரு - எரிகின்ற; விசியுறு இழுத்துக் கட்டிய; பச்சை தோல்

6. எய்யா அறிய முடியாத; இளஞ்சூல் இளைய கருப்பம்; செய்யோள் சிவந்த நிறமுடையவள்; அவ்வயிற்று அழகிய வயிற்றில்

7. ஐது மெல்லிது; ஒழுகிய - நீண்ட

8. பொல்லம் தைத்தல்; பொல்லம் பொத்திய - தைத்த; பொதியுறு - பொதிந்து வைத்த

9. அளை - வளை; அலவன் - நண்டு; கண்கண்டன்ன கண்ணைக் கண்டாற்போல்

10. துளைவாய் துளையுள்ள வாய்; தூர்ந்த - மறைந்த; துரப்புதல்முடுக்குதல்

11. எண்ணாள் - எட்டாம் நாள்; வடிவிற்று ஆகி வடிவைக் கொண்டது

12. அண்ணா உள்நாக்கு; அமைவரு - அமைதலை உடைய; வறுவாய் நாக்கு இல்லாத வெறும்வாய்

13. அணந்தன்ன தலையெடுத்தாற் போன்ற; ஓங்கு நீண்ட; இரு - கரிய; மருப்பு தண்டு

14. மாயோள் கரிய நிறமுடைய பெண்; ஆய்தொடி ஆய்ந்து அணிந்த வளை; கடுக்கும் ஒக்கும்

15. கண்கூடு இருக்கைஒன்றோடொன்று கூடும்படி இருத்தல்; திண்பிணி திண்மையான கட்டு; திவவு நரம்புக்கட்டு

16. ஆய்தினை அழகிய தினை; அவையல் - குத்தல்; அன்ன - போன்ற

17. வேய்வை யாழ் நரம்புக் குற்றவகை; வேய்வை போகிய குற்றம் நீங்கிய; விரல் உளர் விரலால் சுண்டி இழுக்கும்

18. கேள்வி - இசை; போகிய முற்றுப் பெற்ற; விசித்தல் - கட்டுதல்; தொடையல் தொடர்ச்சி

19. மாதரை - மாதர்களை; மண்ணுதல் - அலங்கரித்தல்; மண்ணின்அன்ன அலங்காரம் செய்ததைப் போன்ற

20. அணங்கு தெய்வம்; மெய்ந்நின்ற நிலைத்து நின்ற; அமைவரு - அமைந்திருக்கின்ற; காட்சி - காண்பதற்கினிய அழகு

21. ஆறலை கள்வர் வழிப்பறிக் கள்வர்; படைவிட ஆயுதங்களைத் தம் கைகளில் இருந்து கீழே விடுமாறு; அருளின் அருளிலிருந்து

22. மாறுதல் மாறுபடுதல்; பெயர்க்கும் - நீக்கும்; மருஇன் பாலை மருவுவதற்கு (தழுவுவதற்கு) இனிய பாலையாழ்

 

பதவுரை:

4. குளப்பு வழி அன்ன கவடுபடு பத்தல் - மானின் குளம்பு அழுத்திய இடத்தைப்போல இரு பக்கமும் தாழ்ந்து நடுவில் உயர்ந்த குடத்தினையும்

5. விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை -   விளக்கின் எரிகின்ற பிழம்பின் நிறத்தை ஒத்த நிறமுடையதும் இழுத்துக் கட்டிய தோல்,

6. எய்யா இளஞ்சூல் செய்யோள் அவ்வயிற்று - பிறரால் அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல்

7. ஐதுமயிர் ஒழுகிய தோற்றம் போலப் - மெல்லியதாக மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,

8. பொல்லம் பொத்திய பொதியுறு போர்வை - இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்து மூடிய போர்வையினையும்;

9. அளைவாழ் அலவன் கண்கண் டன்ன - வளையில் வாழ்கின்ற நண்டின் கண்ணைக் கண்டது போன்ற

10. துளைவாய் தூர்ந்த துரப்பமை ஆணி - துளைகளின் வாய் மறைய முடுக்குதல் அமைந்த ஆணியினையும்

11. எண்ணாள் திங்கள் வடிவிற்று ஆகி - பூர்ணிமைக்கு எட்டாம் நாள் தோன்றும் திங்களின் வடிவினையுடையது ஆகி,

12. அண்ணா இல்லா அமைவரு வறுவாய் - உள்நாக்கு இல்லாத வறிய வாயினையும்;

13. பாம்பு அணந்தன்ன ஓங்கு இரு மருப்பின் - பாம்பு தலையெடுத்தாற் போன்ற ஓங்கிய கரிய தண்டினையும்;

14. மாயோள் முன்கை ஆய்தொடி கடுக்கும் - கருநிறப்பெண்ணின் முன்கையில் அணியப்பட்ட அழகிய வளையலை ஒத்ததும்,

15. கண்கூடு இருக்கை திண்பிணித் திவவின் - நெருங்கின இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்

16. ஆய்தினை அரிசி அவையல் அன்ன - அழகிய தினை அரிசியின் குற்றலைப் போன்ற

17. வேய்வை போகிய விரல்உளர் நரம்பின் - யாழ் நரம்பின் குற்றமாகிய வேய்வை போக விரலால் சுண்டி இழுக்கும் நரம்பின்

18. கேள்வி போகிய நீள்விசித் தொடையல் - இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக் கட்டிய தொடர்ச்சியையும்,

19. மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன -புதுமணக்கோலம் பொலிவு பெற்ற மாதரை ஒப்பனைசெய்து கண்டாற் போன்ற,

20. அணங்குமெய்ந் நின்ற அமைவரு காட்சி யாழுக்குரிய தெய்வம் நிலைத்துநின்ற நன்கு அமையப்பெற்ற தோற்றத்தையுடைய,               

21. ஆறலை கள்வர் படைவிட அருளின் வழிப்போக்கர்களை வருத்தும் கள்வர்கள் தம் படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்

22. மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை - மாறாகிய மறப்பண்பினை அவரிடத்திலிருந்து அகற்றுகின்ற, தழுவுவதற்கு இனிய பாலையாழை -

 

கருத்துரை:

யாழின் குடம் (பத்தல்) மானின் குளம்பு அழுத்திய இடத்தைப்போல இரண்டு பக்கமும் தாழ்ந்தும் நடுவில் உயர்ந்தும் இருக்கிறது. விளக்கின் எரிகின்ற தீயின் நிறத்தையுடைய தோலால் அந்தக் குடம் போர்த்தப் -பட்டிருக்கிறது. தோலாலான அந்தப் போர்வை நன்றாக இழுத்துக் கட்டித் தைக்கப்பட்டுள்ளது. கருப்பமான பெண்ணின் சிவந்த நிறமுள்ள அழகிய வயிற்றில் மயிர் தொடர்ச்சியாக இருப்பதுபோல் அந்தத் தையல் இருக்கிறது. அந்தக் குடத்தை மூடும் போர்வையைத்   தைப்பதற்கு நண்டின் கண்களைப் போன்ற ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த யாழின் முன்பக்கம் எட்டாம் நாள் நிலவுபோல் அரைவட்ட வடிவினதாகவும், உள்நாக்கு இல்லாத வாய்போலும் உள்ளது. யாழின் கரிய நிறமான தண்டு பாம்பு தலையெடுத்ததைப்போல் உள்ளது. யாழில் உள்ள வார்க்கட்டு கரிய நிறமுள்ள பெண்ணின் முன்கையில் அணிந்த அழகிய வளையல்கள் போல் உள்ளது. விரலால் அலைத்து வாசிக்கப்படும் நரம்புகள் தினையின் குற்றலரிசி போன்றவை.  அந்த யாழின் அழகு, ஒப்பனை செய்யப்பட்ட புதுமணப்பெண்போல் உள்ளது. அந்த யாழின் இனிய இசையைக் கேட்டால், ஆறலைக்கள்வர்கள் தம் கைகளில் இருக்கும் படைக் கருவிகளைத் தம்மை அறியாமலேயே நழுவவிட்டுவிடுவார்கள்;  தங்களின் அறமற்ற செயல்களைச் செய்வதை விட்டுவிடுவார்கள். அந்தப் பாலையாழ் தழுவுவதற்கு இனியது.


 

யாழை மீட்டிப் பாடுதல்

வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்,

சீருடை நன் மொழி நீரொடு சிதறி

 

அருஞ்சொற்பொருள்:

23. வார்தல் - நரம்புகளைத் தழுவி வாசித்தல்; வடித்தல் - உருவுதல் (நரம்பைச் சுண்டுதல் என்றும் பொருள் கொள்ளலாம்); உறழ்தல் ஒன்றைவிட்டு ஒன்றைச் சுண்டுதல்

24. சீர் சிறப்பு; சீருடை நன்மொழி சிறப்புடைய நல்ல பாடல்கள்; நீர் இயல்பு; சிதறுதல் விட்டுவிட்டுப் பாடுதல்

 

பதவுரை:

23. வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் நரம்புகளைத் தழுவியும், உருவியும் ஒன்றைவிட்டு ஒன்றைச் சுண்டியும்,

24. சீருடை நன் மொழி நீரொடு சிதறி சிறப்பான நல்ல பாடல்களை அவற்றிற்குரிய இயல்போடு பாடி

 

கருத்துரை:

அந்தப் பாலையாழின் நரம்புகளைத் தழுவியும், உருவியும், தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும், சிறப்பான பாடல்களை அவறிற்குரிய இயல்போடு விறலி பாடுகிறாள்.

 

பாடினியின் கேசாதிபாத வருணனை


அறல் போல் கூந்தல், பிறைபோல் திருநுதல்,            25

 

கொலை வில் புருவத்து, கொழுங்கடை மழைக்கண்,

இலவு இதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்,

பல உறு முத்தின் பழிதீர் வெண் பல்,

மயிர் குறை கருவி மாண்கடை அன்ன

பூங்குழை ஊசற் பொறைசால் காதின்,                    30

 

நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின்,

ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை,

நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல்,

கிளி வாய் ஒப்பின் ஒளிவிடு வள்உகிர்,

அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து,        35

 

ஈர்க்கு இடை போகா ஏர் இள வனமுலை,

நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்,

உண்டு என உணரா உயவும் நடுவின்,

வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்,

இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின்,   40

 

 

பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப

வருந்து நாய் நாவின், பெருந்தகு சீறடி,

அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின்,

பரல்பகை உழந்த நோயொடு சிவணி,

மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்                    45

 

நன்பகல் அந்தி நடை இடை விலங்கலின்,

பெடை மயில் உருவின், பெருந்தகு பாடினி

 

அருஞ்சொற்பொருள்:

25. அறல் கருமணல்; நுதல் நெற்றி

26. கொழுங்கடை வளமான ஓரம்; மழைக்கண் குளிர்ச்சியான கண்

27. புரையும் ஒக்கும்; துவர் சிவப்பு

28. பழி குற்றம்; வெண்பல் வெண்மையான பற்கள்

29. மயிர் குறை கருவி கத்தரிக்கோல்; மாண்கடை கத்தரிக்கோலின் கைப்பிடி

30. பூ- அழகு; குழை காதில் அணியும் அணிகலன்; பொறை பாரம்

31 அட தடுக்க; நலம் அழகு; கிளர் மிகுதியாகத் தோன்றும்

32. ஆடு ஆசையும்; அமை மூங்கில்; பணை பருத்தல்; அரிமயிர் மெல்லிய மயிர்

33. நெடுவரை உயர்ந்த மலை; மிசைய மேலே

34. வள் வளப்பம்; உகிர் நகம்

35. அணங்கு வருத்தம்

36. ஈர்க்கு ஒலையின் நரம்பு; இடை போகா இடையே போகாத

37. பெயர் சுழி பெயர்தலையுடைய சுழி

38. உயவும் வருத்தும்; நடு இடை

39. காழ் மணி

40. இரும் பெரிய; பிடி பெண்யானை; தடக்கை பெரிய துதிக்கை; குறங்கு தொடை

41. ஒழுகிய தொடர்ந்து வளர்ந்த; திருந்து திருத்தமுடைய

42. வருந்துநாய் ஓடி இளைத்த நாய்

43. செந்நிலன் சிவந்த நிலம்

44. பரல் பருக்கைக்கல்; உழந்த வருந்திய; சிவணி பொருந்தி

45. மரல் ஒருவகைச்செடி; மறுகுநீர் துளும்பும் நீர்; மொக்குள்கொப்புளம்

46. நன்பகல் நல்ல உச்சிக்காலம்; அந்தி சந்தி; விலங்கலின் தவிர்தலால்

47. பெடைமயில் பெண்மயில்; பாடினி விறலி; பாணி தாளத்தோடு பாடும் பாட்டு

 

 

 

பதவுரை:

25. அறல் போல் கூந்தல், பிறைபோல் திருநுதல் -கருமணலைப் போன்ற கூந்தலையும், பிறை போன்ற அழகிய நெற்றியையும்,                        

26. கொலை வில் புருவத்து, கொழுங்கடை மழைக்கண் - கொலை செய்யும் வில் போன்ற புருவத்தினையும், அழகிய ஓரத்தினையும், குளிர்ச்சியுள்ள கண்களையும்,

27. இலவு இதழ் புரையும் இன்மொழித் துவர்வாய் - இலவின் இதழைப்போல் அழகாகவும் அவளுடைய சிவந்த வாயில் இருந்து வரும் சொற்கள் இனிமையானவையாகவும்

28. பல உறு முத்தின் பழிதீர் வெண் பல் பல முத்துகளைச் சேர்த்து வைத்ததைப் போன்ற, குற்றமற்ற வெண்மையான பற்களையும்,

29. மயிர் குறை கருவி மாண்கடை அன்ன - மயிரைக் குறைக்கின்ற கத்தரிக்கோலின் சிறப்பாக அமைந்த கைப்பிடியை ஒத்ததும்,

30. பூங்குழை ஊசற் பொறைசால் காதின் பொலிவுபெற்ற அழகிய குழைகள் ஊசலாடும் காதுகளையும்,                     

31. நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின் - நாணம் தன்னை அழுத்த, பிறரை நோக்காது கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்,

32. ஆடு அமைப் பணைத் தோள், அரி மயிர் முன்கை - அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளினையும், மென்மையான மயிரினையுடைய முன்கையினையும்

33. நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - நெடிய மலையின் உச்சியில் வளர்ந்திருக்கும் காந்தள் போன்ற விரல்களையும்,

34. கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள்உகிர் - கிளியின் வாயை ஒத்த, ஒளிவிடுகின்ற வளமான நகங்களையும்,

35. அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து -பிறர்க்கு வருத்தம் எனத் தோன்றின தேமல் அணிந்த மார்பினில்           

36. ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை - ஈர்க்குச்சியும் நடுவே போகாத எழுச்சியையும் இளமையையும் உடைய அழகிய முலைகளையும்

37. நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ் நீரிலே உள்ள சுழி போலச் சிறந்த இலக்கணம் அமைந்த கொப்பூழினையும் (தொப்புளையும்),

38. உண்டு என உணரா உயவும் நடுவின் - உண்டென்று பிறரால் உணரப்படாத வருந்துகின்ற இடையினையும்,

39. வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் - பல வண்டுகளின் இருப்பைப் போன்ற பலமணி கோத்த வடங்களையுடைய மேகலை அணிந்த அல்குலையும்,

40. இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின் -பெரிய பெண்யானையின் பெரிய துதிக்கை போல நெருங்கி ஒன்றித் திரண்ட தொடையினையும்

41. பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப - பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட திருத்தமான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த

42. வருந்து நாய் நாவின், பெருந்தகு சீறடி - ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும், (அப்பாதங்களில் ஏற்பட்ட)

43. அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின் - சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடந்ததால்

44. பரல்பகை உழந்த நோயொடு சிவணி பரற்கற்களால் வந்த பகையால் வருந்திய நோயுடன் பொருந்தி

45. மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள் -     மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,               

46. நன்பகல் அந்தி நடை இடை விலங்கலின் - நல்ல உச்சிக்காலமான சந்தியிலே நடத்தலை நடுவே தவிர்த்தலால்

47. பெடை மயில் உருவின், பெருந்தகு பாடினி பெண் மயிலின் சாயலினையும் உடைய கல்விப்பெருமை பொருந்திய பாடினி

 

 

கருத்துரை:

விறலியின் கூந்தல் ஆற்றின் கறுமணலைப்போல் கருமையாக உள்ளது. அவளுடைய அழகிய நெற்றி பிறைபோல் தோற்றம் அளிக்கிறது; புருவம் கொலை செய்யும் வில்லைப்போல் உள்ளது; கண்கள் குளிர்ச்சியுடையவை; வாய் இலவம் பூவின் இதழைப்போல் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அவள் வாயிலிருந்து வரும் சொற்கள் இனிமையானவையாக உள்ளன. அவள் பற்கள் பல முத்துகளைக் கோத்துவைத்ததைப் போல் குற்றமற்ற வெண்ணிறமாக இருக்கின்றன. அவள் காதுகளில் உள்ள துளைகள் கத்தரியின் கைப்பிடிபோல் உள்ளன. அவள் அணிந்திருக்கும் பாரமான குழைகள் அவள் காதுகளில் ஊசலாடுகின்றன. மிகுந்த நாணத்தால். அவள் நிமிர்ந்து பார்க்காமல் தன் பிடரியைக் கீழே சாய்த்திருக்கிறாள். அதனால், அவள் கழுத்தைவிட அவளுடைய பிடரி நன்றாகத் தெரிகிறது. அவளுடைய பருத்த தோள்கள் அசைகின்ற மூங்கிலைப்போல் இருக்கின்றன. அவளுடைய முன்கையில் மெல்லிய மயிர்கள் உள்ளன. அவளுடைய கைவிரல்கள் மென்மையானவையாகவும், மலையின் மேலே வளர்ந்திருக்கும் காந்தள் மலர்களைப் போன்றவையாகவும் உள்ளன. அவள் விரல்களில் உள்ள வளமான நகங்கள் கிளியின் மூக்கைப்போல் உள்ளன. அவளுடைய அழகிய இளமையான, தேமல் படர்ந்த மார்பகங்கள் காண்பவர்களுக்கு வருத்தத்தை உண்டாக்குகின்றன. அவளுடைய தொப்புள் நீரில் பெயர்தலையுடைய சுழியைப்போல் சிறந்த இலக்கணங்கள் நிறைந்ததாக உள்ளது. அவளுடைய இடை இருக்கிறதா அல்லது இல்லையா என்று பிறரால் உணரப்படாததாகவும், மார்பகங்களின் சுமையால் வருந்துவதாகவும் உள்ளது. வண்டுகள் மொய்த்ததுபோல, பல மணிகள் கோத்த மேகலையை அவள் அணிந்திருக்கிறாள். பெரிய பெண்யானையின் பெருமை பொருந்திய துதிக்கைபோல் நெருங்கித் திரண்ட தொடைகளை உடையவள் அவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய, அழகிய கணைக்காலுக்கு இணையான அழகுடையவை ஓடி இளைத்து நாயின் நாக்கைப் போன்ற அவளது பாதங்கள். அரக்கை உருக்கி வைத்தாற்போல செம்மையும் வெப்பமும் உடைய நிலத்தில் நடந்து வந்ததால் அங்குள்ள பரற்கற்களால் அவள் பாதங்கள் துன்பப்படுகின்றன.  அவள் பாதங்களில் மரல் பழுத்ததுபோலக் கொப்புளங்கள்   தோன்றியுள்ளன. அவள் உச்சி வேளையில் நடப்பதைத் தவிர்க்கிறாள். நடந்து வந்ததால் உண்டாகிய துன்பத்தை மறப்பதற்காக, பெண்மயிலின் உருவத்தைப் போல உருவமும் பெருமையும் தகுதியும் உடைய அந்த விறலி பாடுகிறாள்.

 

 

 

 

சிறப்புக் குறிப்பு:

மரல் - பாம்பு கற்றாழை, வண்ணாத்தி செடி, ஆக்ஸிஜன் செடி, Snake plant என்ற வழக்க பெயர்களால் அறியப்படும் இதன் தாவரவியல் பெயர் Sansevieria trifasciata என்பதாகும். நைஜிரியாவைத் தாயகமாக கொண்டது என்றாலும் தமிழ் இலக்கியங்களில் இது பல இடங்களில் குறிப்பிடப்படுகிறது

 

 


 

காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்


பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும்

களிறு வழங்கு அதர கானத்து அல்கி,

இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி,                    50

 

வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில்,

காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை


அருஞ்சொற்பொருள்:

48. பாணி தாளத்திற்கேற்ப பாடும் பாட்டு

49. களிறு ஆண்யானை; வழங்குதல் உலாவுதல்; அதர் - வழி; கானம் காடு; அல்கி - தங்கி

50. மரா மரா மரம்; எவ்வம் துன்பம்

51. வலத்தல் கட்டுதல்; மருங்கு இடம்

52. உறை தங்கியுள்ள; கழிப்பிய செய்து முடித்த; பின்றை பிறகு

 

பதவுரை:

48. பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தொறும் அந்த விறலி பாடிய தாளத்தோடு கூடிய பாட்டுக்கு ஏற்ப, நாள்தோறும்

49. களிறு வழங்கு அதர கானத்து அல்கி ஆண்யானைகள் உலாவுகின்ற வழிகளையுடைய காட்டில் தங்கி,

50. இலை இல் மராஅத்த, எவ்வம் தாங்கி -      இலையில்லாத மரா மரத்தின் அடியில், வெயிலினால் உண்டாகிய வருத்தத்தைத் தாங்கிக்கொண்டு,                                  

51. வலை வலந்தன்ன மென் நிழல் மருங்கில் - வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்,

52. காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துமுடித்த பிறகு

 

கருத்துரை:

அந்த விறலி பாடிய தாளத்தோடு கூடிய பாட்டுக்கு ஏற்ப நடைபோட்டுவரும் ஆண்யானைகள் நாள்தோறும் உலாவுகின்ற வழிகளையுடைய காட்டில் அவர்கள் (வறுமையில் உள்ள விறலியும் பாணனும் அவர்களின் சுற்றத்தாரும்) தங்கியிருக்கிறார்கள். அங்கு இலையில்லாத மரா மரத்தின் நிழலில், வெயிலினால் உண்டாகிய வருத்தத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிழல், மரா மரத்தின்மேல் வலையைப் போர்த்தியதுபோல், அடர்த்தி இல்லாமல் இருக்கிறது. அங்குத் தங்கியவர்கள், காட்டில் உள்ள தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துமுடித்த பிறகு

 

 

 

பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்


பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன்தாள்,

முரசு முழங்கு தானை, மூவரும் கூடி

அரசவை இருந்த தோற்றம் போல                         55

 

பாடல் பற்றிய பயனுடை எழாஅல்

கோடியர் தலைவ! கொண்டது அறிந!

அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது,

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே;

போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந!                     60

 

அருஞ்சொற்பொருள்:

53. பீடு - பெருமை; கெழுவுதல் பொருந்துதல்; திரு செல்வம்; பெரும் பெயர் பெரும் புகழ்; நோன் தாள் வலிய முயற்சி

54. தானை - சேனை; மூவர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்

56. எழாஅல் பாட்டை எழுப்பும் யாழ்

57. கோடியர் கூத்தர் (பொருநர்); கொண்டது மனதில் நினைத்தது; அறிந அறிய வல்லவன்

58. நெறிவழி; திரிந்து மாறி; ஒராஅது நீங்காமல்

59. ஆறு - வழி; எதிர்ப்படுதல் - சந்தித்தல்; நோற்றதன் பயன்செய்த நல்வினையின் பயன்

60. போற்றி - விரும்பி; கேண்மதி - கேட்பாயாக; புகழ் மேபடுந புகழில் மேம்பட்டவனே

 

பதவுரை:

53. பீடு கெழு திருவின், பெரும் பெயர், நோன் தாள் - பெருமை பொருந்திய செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்

54. முரசு முழங்கு தானை, மூவரும் கூடி - முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து

55. அரசவை இருந்த தோற்றம் போல -           அரசவையில் வீற்றிருக்கும் காட்சியைப் போல           

56. பாடல் பற்றிய பயனுடை எழாஅல்பலவகைப் பாடல்களையும் பற்றித் தோன்றும் இசைப்பயனையுடைய யாழை உடைய

57. கோடியர் தலைவ! கொண்டது அறிந! - கூத்தர்கட்குத் தலைவனே, கேட்பவர்கள் மனத்தில் நினைப்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பாடக்கூடியவனே,

58. அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது - வழி அறியாமல், இந்த வழியைவிட்டு வேறொரு வழியில் போகாமல்,

59. ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே நான் வரும் வழியில் வந்து நீ என்னைச் சந்தித்தது, நீ செய்த தவத்தின் பயனே

60. போற்றிக் கேண்மதி, புகழ் மேம்படுந! – (நான் சொல்வதை) விரும்பிக் கேட்பாயாக, புகழில் மேம்பட்டவனே!

 

கருத்துரை:             

பெருமை பொருந்திய செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும் முரசு முழங்கும் படையினையு - முடைய சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களும் சேர்ந்து அரசவையில் வீற்றிருக்கும்போது அவர்களது படையானது முரசை முழக்கும்போது எழுச்சி மிக்க இசை எழுபம்புவது போல, தம் முரசை முழக்கி, யாழை மீட்டிப் பாடிவரும் சிறப்புக்குரிய கூத்தர் தலைவனே!  கேட்பவர்கள் மனத்தில் நினைப்பதை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் பாட வல்லவனே! வழி அறியாமல், இந்த வழியைவிட்டு வேறொரு வழியில் போகாமல், நான் வரும் வழியில் வந்து நீ என்னைச் சந்தித்தது, நீ செய்த தவத்தின் பயனே. நான் சொல்வதை விரும்பிக் கேட்பாயாக! புகழில் மேம்பட்டவனே!

 


 

பரிசு பெற்றோன் பாடின முறை

ஆடு பசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு

நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்று

எழுமதி; வாழி, ஏழின் கிழவ!

பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன்

இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்,               65

 

நசையுநர்த் தடையா நன் பெரு வாயில்

இசையேன் புக்கு, என் இடும்பை தீர,

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி,

பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப,

கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி               70

 

இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர்

வெள்ளி முளைத்த நள் இருள் விடியல்,

ஒன்று யான் பெட்டா அளவையின்

 

அருஞ்சொற்பொருள்:

61. ஆடு கொல்லுகின்ற (வருத்துகின்ற); உழந்த - வருந்திய; இரும் பேர் கரிய பெரிய; ஒக்கல் - சுற்றம்

62. நீடு பசி நெடுங்காலமாக இருக்கும் பசி; ஒராஅல் நீக்குதல்; நீடு இன்று காலம் தாழ்த்தாது

63. எழுமதி - எழுவாயாக; ஏழு ஏழு சுரங்கள்; கிழவ - உரிமை உடையவனே

64. பழுமரம் பழுத்த மரம்; உள்ளிய நினைத்துத் தேடிய

65. இழும் இடைவிடாது ஒலிக்கும் ஒலி; சும்மை - ஒலி; இடன் இடம்; வரைப்பு சுற்றுச் சுவர் (மதில்)

66. நசையுநர் - பரிசுபெற விரும்பி வருபவர்கள்; தடையா தடை செய்யாத

67. இசையேன் சொல்லாமல்; புக்கு புகுந்து; இடும்பை துன்பம்

68. எய்த்த - இளைத்த; மெய்யேன் உடலை உடைய நான்; எய்யேன் ஆகி இளைப்புத் தீர்ந்தவனாகி

69. பைத்த படம் விரித்த; துத்தி பொறி; ஏய்ப்ப போன்ற

70. கசடு - வடு; கண் பறையில் அடிக்கும் பக்கம்; தடாரி தடாரிப் பறை (உடுக்கை)

71. இருசீர்ப் பாணி இரட்டைத் தாளம்; விரி கதிர் விரிந்த கதிர்

72. வெள்ளி சுக்கிரன்; நள் இருள் செறிந்த இருள்; விடியல்விடியற் காலை

73. பெட்டல் விரும்புதல்; அளவையின் - முன்னே

 

பதவுரை:

61. ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு - கொல்லுகின்ற பசியால் வருந்தும் உன் கரிய பெரிய சுற்றத்தோடு,

62. நீடு பசி ஒராஅல் வேண்டின், நீடு இன்றுநெடுநாட்களாக இருக்கும் உன்னுடைய பசி உன்னை விட்டு நீங்குவதை விரும்பினால், காலம் தாழ்த்தாது

63. எழுமதி; வாழி, ஏழின் கிழவ! - எழுவாயாக, நீ வாழ்வாயாக, ஏழு சுவரங்களையுடைய பாடல்களைப் பாடும் உரிமை பெற்றவனே

64. பழுமரம் உள்ளிய பறவையின், யானும், அவன் - பழுத்த மரத்தை நினைத்துச் செல்லும் பறவையைப்போல, நானும், அவனுடைய

65. இழுமென் சும்மை இடனுடை வரைப்பின் இடைவிடாது ஒலிக்கும் ஒலியையுடைய அகலமான இடத்தையுடைய மதிலில்

66. நசையுநர்த் தடையா நன் பெரு வாயில் - விரும்பி வந்தவர்களைத் தடுக்காத நல்ல பெரிய வாயிலினுள்

67. இசையேன் புக்கு, என் இடும்பை தீர வாயிலோனிடம் கூறாமற் புகுந்து, என்னுடைய துன்பம் தீர

68. எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி - இளைத்த உடம்பையுடையேன் இளைப்புத் தீர்ந்தவனாகி,

69. பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப - படம் விரித்த பாம்பினது பொறியை ஒப்ப

70. கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி என் கையின் வடுபட்டுக் கிடந்த அடிக்கும் இடம் அகன்ற உடுக்கையில் (தடாரிப்பறையில்)      

71. இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப, விரி கதிர் - இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, விரிந்த கதிரையுடைய

72. வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் - விடிவெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தில்

73. ஒன்று யான் பெட்டா அளவையின்ஒரு பாட்டினை நான் விரும்பிப் பாடுவதற்கு முன்னே

 

கருத்துரை:

உன்னையும் உன் கரிய பெரிய சுற்றத்தாரையும் நெடுநாட்களாக வருத்தும் பசி நீங்குவதை நீ விரும்பினால், காலம் தாழ்த்தாது எழுவாயாக! நீ வாழ்வாயாக! ஏழு சுவரங்களையுடைய பாடல்களைப் பாடும் உரிமை பெற்றவனே! நானும் பழுத்த மரங்களைத் தேடி அலையும் பறவைகளைப்போலப் பரிசில் தருவோரைத் தேடி அலைந்தேன். ஒருநாள், இடைவிடாது ஒலிக்கும் ஒலியையுடைய அகலமான இடத்தையுடைய மதிலில் இருந்த வாயிலில், வாயில்காப்போனிடம் கூறாது புகுந்தேன். அந்த வாயில் விரும்பி வந்தவர்களைத் தடுக்காத நல்ல பெரிய வாயில். வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் இளைத்த என் உடலிலிருந்து இளைப்பு நீங்கிற்று. எனது உடுக்கையின் கண் என் கைபடுதலினால் பாம்பின் படத்தின் பொறிகள் போன்ற தழும்புகள் பெற்றிருந்தது. அந்த உடுக்கையை அடித்து, இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, இருளையுடைய விடியற்காலத்தில் ஒரு பாட்டினை நான் விரும்பிப் பாடுவதற்கு முன்னே

அரசன் விருந்தோம்பலின் சிறப்பு

. . . . . . . . . . . . . . . . . . . ஒன்றிய

கேளிர் போல, கேள் கொளல் வேண்டி,

வேளாண் வாயில் வேட்பக் கூறி,                  75

கண்ணில் காண நண்ணு வழி இரீஇ,

பருகு அன்ன அருகா நோக்கமோடு,

உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ,

ஈரும் பேனும் இருந்து இறைகூடி,

வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த  80

துன்னல் சிதாஅர் துவர நீக்கி,

நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக்கனிந்து

அரவுஉரி அன்ன, அறுவை நல்கி,

மழை என மருளும் மகிழ்செய் மாடத்து,

இழை அணி வனப்பின் இன்நகை மகளிர்,      85

போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால்,

வாக்குபு தரத்தர, வருத்தம் வீட,

ஆர உண்டு, பேர் அஞர் போக்கி,

செருக்கொடு நின்ற காலை,

 

அருஞ்சொற்பொருள்:

73. ஒன்றிய பொருந்திய

74. கேளிர் நண்பர், உறவினர்; கேள் கொளல் உறவு கொள்ளுதல்

75. வேளாண் வாயில் உதவி செய்வதற்குரிய வழி; வேட்ப விரும்பும்படி

76. நண்ணு வழி அருகான இடத்தில் (அருகில்); இரீஇ இருக்கச் செய்து

77. அருகா தணியாத; நோக்கம் பார்வை

78. உருகுபவை உருகும் பொருள்கள்; என்பு எலும்பு; கொளீஇ கொள்ளச் செய்து

79. இறைகூடி அரசாண்டு

80. வேர் வேர்வை; வேற்று இழை வேறு நூல்

81. துன்னல் தைத்தல்; சிதாஅர் கந்தை; துவர முற்றும்

82. நோக்கு நுழைகல்லா பார்வை புக முடியாத; பூக் கனிந்து - பூ வேலைப்படுகள் நிரம்பி

83. அரவுரி பாம்புச் சட்டை; அறுவை ஆடை; நல்கி வழங்கி

84. மழை மேகம்; மருளுதல் மயங்குதல்

85. இழைத்தல் நுண்ணிதாக ஆராய்தல்; அணி - அணிகலன்; வனப்பு அழகு

86. போக்கு குற்றம்; பொலம் பொன்

87. வாக்குபு ஊற்றி; வீட போகும்படி

88. ஆர நிறைய; பேர் அஞர் பெருந்துன்பம்

89. செருக்கு மகிழ்ச்சி

 

பதவுரை:

73. ஒன்றிய தன்னோடு பொருந்திய

74. கேளிர் போல, கேள் கொளல் வேண்டி - நண்பரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி

75. வேளாண் வாயில் வேட்பக் கூறி -  தன் உபசரிப்பிற்கு வழிமுறையாக நான் விரும்புமாறு பேசி

76. கண்ணில் காண நண்ணு வழி இரீஇதன் கண்ணில் படும்படியாகத் தனக்கு அருகில் என்னை அமரச் செய்து

77. பருகு அன்ன அருகா நோக்கமோடு - என்னைக் கண்ணால் விழுங்குவது போன்ற குறையாத பார்வையால்

78. உருகுபவை போல் என்பு, குளிர் கொளீஇ உருகும் பொருள்களைப்போல் என் எலும்பும் குளிரும்படி குளிர்ச்சியை உண்டாக்கி

79. ஈரும் பேனும் இருந்து இறைகூட - ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து,

80. வேரொடு நனைந்து, வேற்று இழை நுழைந்த -வேர்வையால் நனைந்து, வேறு நூல் நுழைந்த

81. துன்னல் சிதாஅர் துவர நீக்கி - தைத்தல் உடைய கந்தையை முழுதும் நீக்கி

82. நோக்கு நுழைகல்லா நுண்மைய, பூக் கனிந்து - பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நிறைந்ததும்

83. அரவு உரி அன்ன, அறுவை நல்கி மென்மையான பாம்புச் சட்டை போன்ற ஆடையை அளித்து,

84. மழை என மருளும் மகிழ் செய் மாடத்து - முகில்களோ என்று மயங்குவதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில்,

85. இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் ஆராய்ந்து செய்த அணிகலன்களை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர்

86. போக்கு இல் பொலங் கலம் நிறைய, பல் கால் - குற்றம் அற்ற பொன்னால் செய்த வட்டில் நிறைய, பல முறையும்

87. வாக்குபு தரத்தர, வருத்தம் வீட ஊற்றித் தந்துகொண்டே இருக்க, வழி நடந்த வருத்தம் போகும்படி,

88. ஆர உண்டு, பேர் அஞர் போக்கி - நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி,

89. செருக்கொடு நின்ற காலை மகிழ்ச்சியோடு நான் நின்றபொழுது

 

கருத்துரை:

தன்னுடைய நெருங்கிய நண்பரைப்போல் அவன் என்னுடன் உறவுகொள்ள விரும்பினான்; நான் விரும்புமாறு என்னிடம் பேசினான்; தன் கண்ணில் படும்படியாகத் தனக்கு அருகில் என்னை அமரச் செய்தான்; என்னைக் கண்ணால் விழுங்குவது போல் அன்போடு பார்த்தான். அவனுடைய பார்வை என் எலும்பைக் குளிரச் செய்தது. ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து, வேர்வையால் நனைந்து, வேறு நூல் நுழைந்த தைத்தல் உடைய என் கந்தையை முழுதும் நீக்கிப் பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நிறைந்ததும், பாம்புச் சட்டை போன்ற மென்மையானதுமான ஆடையை அளித்து என்னை உடுக்கச் செய்தான். முகில்களோ என்று மயங்குவதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில், ஆராய்ந்து செய்த அணிகலன்களை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர், குற்றமற்ற பொன்னால் செய்த வட்டில் நிறைய, பல முறையும் கள்ளை ஊற்றித் தந்துகொண்டே இருந்தார்கள். என்னுடைய வழி நடந்த வருத்தம் போகும்படி நிறைய உண்டு, அந்த வருத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியோடு நான் இருந்தேன்.

 


 

இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்

 

. . . . . . . . . . . . . . . . . .மற்று அவன்

திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி,                            90

 

தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது

அதன் பயம் எய்திய அளவை மான,

ஆறு செல் வருத்தம் அகல நீக்கி,

அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும்

மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து,                 95

 

அருஞ்சொற்பொருள்:

89. அவன் - கரிகாலன்

90. திரு செல்வம்; கிளர் மேன்மேலும் தழைக்கும்; கோயில் அரண்மனை; சிறை – (ஒரு)பக்கம்

91. மாக்கள் மக்கள்; இடாஅது விட்டுவிடாமல்

92. பயம் பயன்; எய்திய -பெற்ற; அளவை - தன்மை; மான போல

93. ஆறு - வழி; அகல முழதும்

94. அனந்தர் துயின்று எழுந்தவுடன் தோன்றும் மயக்கம்

95. கவல்பு கவலையடைதல்; மாழாந்து மயங்கி

 

 

பதவுரை:

89. மற்று அவன் மேலும், கரிகாலனுடைய

90. திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கி -    செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து

91. தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது - (மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த) உடம்பைப் பிரியாமல் இருந்தே

92. அதன் பயம் எய்திய அளவை மான - (இம்மை உடம்போடு) அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப

93. ஆறு செல் வருத்தம் அகல நீக்கி - வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி,

94. அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் - கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு

95. மனம் கவல்பு இன்றி, மாழாந்து எழுந்து -  மனக்கவலை (சிறிதும்) இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து) எழுந்து

 

கருத்துரை:

மேலும், கரிகாலனுடைய செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் நான் தங்கினேன். தவம் செய்பவர்கள் தங்கள் உடல் இறப்பதற்கு முன்பே தவத்தின் பயனைப் பெறுவதைப் போல், நடந்து வந்த துன்பம் என்னிடம் சிறிதும் இல்லாமல் போக்கி, கள் உண்டதனால் தோன்றிய உடல் நடுக்கம் அல்லது, வேறு மனக்கவலை சிறிதும் இல்லாமல் மயங்கி எழுந்தேன்.

காலையில் அரசவைக்குச் செல்லுதல்

மாலை அன்னது ஓர் புன்மையும், காலைக்

கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும்,

கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப,

வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப,

கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட,                        100

 

அருஞ்சொற்பொருள்:

96. புன்மை வறுமை

97. மருண்ட - மயங்கிய; வண்டு சூழ் வண்டுகள் சூழ்ந்திருக்கும்

98. மருண்ட - மயங்கிய; ஏமாப்ப மகிழ

99. வல் - வலிய; அஞர் - துன்பம்; பொத்திய பொருந்திய

100. கல்லா- கற்று (கல்லா என்பது செய்யா என்னும் எச்சம்)

பதவுரை:

96. மாலை அன்னது ஓர் புன்மையும், காலை முந்திய நாள் மாலையில் என்னிடத்தில் இருந்த சொல்ல முடியாத வறுமையும், காலையில்

97. கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் நான் நறுமணமுள்ள பொருள்களை அணிந்திருப்பதால் என்னைக் கண்டோர் மயங்குமாறு வண்டுகள் மொய்க்கின்ற நிலையும்,

98. கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப - கனவோ என்று கலங்கிய என்னுடைய நெஞ்சு துணியும்படி,

99. வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப - வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த என் உள்ளம் மகிழ

100. கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட அரச முறைமையைக் கற்ற இளைஞர் எம் வரவைத் தெரிவிக்க

 

கருத்துரை:    

முந்திய நாள் மாலையில் என்னிடத்தில் இருந்த சொல்ல முடியாத வறுமையையும், காலையில் நான் நறுமணமுள்ள பொருள்களை அணிந்திருப்பதால் என்னைக் கண்டோர் மயங்குமாறு வண்டுகள் மொய்க்கின்ற நிலையையும் நினைத்து என் நெஞ்சம் கனவோ என்று கலங்கியது.  அப்பொழுது, வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த என் உள்ளம் மகிழ, அரச முறைமையைக் கற்ற இளைஞர்கள் எம் வரவை மன்னனுக்குத் தெரிவித்தார்கள்.

 

 

 

 

அரசனை அணுகுதல்


கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய்,

அதன் முறை கழிப்பிய பின்றை,

 

அருஞ்சொற்பொருள்:

101. கதுமென - விரைவில்; கரைந்து - சொல்லி; வம் என வாருங்கள் என்று, கூஉய் உரக்க அழைத்து

102. அதன் முறை அவனைக் கண்டபோது செய்ய வேண்டிய முறைகள்; கழிப்பிய -செய்து முடித்த ; பின்றை பிறகு

 

பதவுரை:

101. கதுமெனக் கரைந்து, 'வம்' எனக் கூஉய் - விரைவாக அழைத்து, ‘வருக வருக' என்று உரக்கச் சொல்லி

102. அதன் முறை கழிப்பிய பின்றை - அரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பிறகு

 

கருத்துரை:

எங்கள் வரவைப் பற்றி அந்த இளைஞர் கூறியவுடன், மன்னன் விரைவாக அழைத்து வாருங்கள்என்று கூறினான். நாங்கள் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றவுடன், ‘வருக வருக' என்று உரக்கச் சொல்லி எங்களை அழைத்தான். மன்னனைக் காணும்பொழுது நாங்கள் செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து முடித்தோம்.

 

உணவு கொடுத்து ஓம்பிய முறை


. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பதன் அறிந்து

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்

பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி,

காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை                 105

 

ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி,

அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய

வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ,

மண் அமை முழவின் பண் அமை சீறியாழ்

ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க,                      110

 

மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒருநாள்,

'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த்தகை

முரவை போகிய முரியா அரிசி

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல்,

பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப                  115

 

 

அயின்ற காலை, பயின்று இனிது இருந்து,

கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே

எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி,

உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து,

 

அருஞ்சொற்பொருள்:

102. பதன் அறிந்து காலம் அறிந்து

103. துராஅய் அறுகம்புல்; துற்றிய ஊட்டிய; துருவை - செம்மறியாடு; புழுக்கு வேகவைத்த ஊன்

104. பராஅரை பழுத்த தொடை; வேவை வெந்த ஊன்; பருகு உண்க; தண்டி வற்புறுத்தி

105. காழ் இருப்புக் கோல்; கோழூன் கோழ்+ஊன் கொழுப்பான ஊன்; கொழுங்குறை வளப்பமான துண்டுகள்

106. ஊழின் ஊழின் - முறைமுறை; வெய்து ஒற்றி வெப்பத்தைக் குறைக்க, வாயின் வலப்பக்கமும் இடப்பக்கமும் மாற்றி மாற்றி வைத்து உண்ண

107. அவை அவை பல வகையான; முனிகுவம் வெறுத்தோம்; சுவைய சுவையான

108. விரகு உபாயம், பணியாரம்; இரீஇ இருக்கச் செய்து

109. மண் மார்ச்சனை (முழவிற்கிடும் கருஞ்சாந்து); முழவு மத்தளம்; சீறியாழ் சிறிய யாழ்

110. ஒண்ணுதல் ஒள்+நுதல் ஒளிபொருந்திய நெற்றி; பாணி தாளம்; தூங்க ஆட

111. பதம் உணவு (கள்); கழிப்பி -போக்கி

112. அவிழ் சோறு; பதம் உணவு; முகிழ் - அரும்பு; தகை - தன்மை

113. முரவை போகிய இடை முறியாத

114. நிரல் - வரிசை; புழுக்கல் வெந்தது

115. பரல் விதை; வறை வறுத்தவை; கருனை பொரிக்கறி; காடிகழுத்து

116. அயின்ற விழுங்கிய; பயின்று பழகி

117. கொழு - கலப்பையின் முனை; ஏய்ப்ப ஒக்கும்

118. எல்லை -பகல்

119. உயிர்ப்பு மூச்சு, இளைப்பாறுதல்; இடம் நேரம்; ஊண் - உணவு

பதவுரை:

102. பதன் அறிந்து - காலமறிந்து,

103. துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் - அறுகம்புல் கட்டுகளைக் கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட இறைச்சியின்

104. பராஅரை வேவை 'பருகு' எனத் தண்டி நன்றாக வேகவைத்த தொடைக்கறியைக் கொடுத்து உண்பாயாக' என்று வற்புறுத்தி

105.  சுட்ட கோழ் ஊன் கொழுங் குறை -         இருப்புக் கம்பியில் கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை      

106. ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி - மாற்றி மாற்றி வாயின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் அத்தசைகளின் வெப்பத்தை ஒற்றியெடுத்து,

107. அவைஅவை முனிகுவம் எனினே, சுவைய புழுக்கினவும் சுட்டனவுமாகிய உணவுப் பண்டங்களை நாங்கள் இனி வேண்டாம் என்றபொழுது, சுவையான

108. பல் உருவின் விரகு தந்து இரீஇ - வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைத் தந்து, எங்களை இருக்கச் செய்து,

109. மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் - மார்ச்சனை அமைந்த முழவின் தாளத்திற்கு ஏற்ப பண் அமைந்த சிறிய யாழையுடைய

110. ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க -ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட,                       

111. மகிழ்ப் பதம் பல் நாள் கழிப்பி, ஒரு நாள் இவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் கள்ளை உண்டு உண்டு பல நாட்களைப் போக்கி, ஒரு நாள்

112. 'அவிழ்ப் பதம் கொள்க' என்று இரப்ப, முகிழ்த் தகை - ‘சோற்று உணவை உண்ணுங்கள் என்று அவன் வேண்டிக்கொள்ள, (முல்லை) அரும்பின் தன்மையையுடைய

113. முரவை போகிய முரியா அரிசி - தவிடு நீங்கிய முனை முறியாத அரிசி

114. விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் விரல்போல் நீண்ட ஒன்றோடு ஒன்று சேராத சோற்றையும்

115. பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப - பருக்கைக் கற்கள் போன்று, நன்கு பொரித்த பொரிக்கறிகளையும், கழுத்துவரை நிரம்பும்படி                     

116. அயின்ற காலை, பயின்று இனிது இருந்து விழுங்கிய காலத்தில், (அவனோடு) இடையறாது பழகி இனிதாக அங்கே தங்கி,

117. கொல்லை உழு கொழு ஏய்ப்ப, பல்லே - கொல்லை நிலத்தில் உழுத கலப்பையின் முனையைப்போல் எங்கள் பற்கள்

118. எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி - பகலும் இரவும் இறைச்சியைத் தின்று முனை மழுங்கி,

119. உயிர்ப்பிடம் பெறாஅது, ஊண் முனிந்து மூச்சு விடுவதற்கும் நேரமில்லாமல் நிரம்ப உணவைத் தின்றதால், அவ்வுணவுகளை வெறுத்து,

 

கருத்துரை:

உணவு உண்ணும் நேரம் அறிந்து, அறுகம்புல் கட்டுகளைக் கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட இறைச்சியின் நன்றாக வேகவைத்த தொடைக்கறியைக் கொடுத்து உண்பாயாக' என்று அவன் எங்களை வற்புறுத்தினான். பிறகு இருப்புக் கம்பியில் கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளைக் கொடுத்தான். வாயின் இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் மாற்றி மாற்றி ஒற்றியெடுத்து, அவற்றின் வெப்பத்தைக் குறைத்து உண்டு களித்தோம். புழுக்கினவும் சுட்டனவுமாகிய உணவுப் பண்டங்களை நாங்கள் இனி வேண்டாம் என்றபொழுது, சுவையான வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைத் தந்து, எங்களை இருக்கச் செய்தான். மார்ச்சனை அமைந்த முழவின் தாளத்திற்கு ஏற்ப பண் அமைந்த சிறிய யாழையுடைய, ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியர் ஆடினார்கள். இவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் கள்ளை உண்டு உண்டு பல நாட்களைப் போக்கினோம். ஒரு நாள், ’சோற்று உணவை உண்ணுங்கள் என்று அவன் வேண்டிக்கொள்ள, (முல்லை) அரும்பைப் போன்ற அரிசிச் சோற்றையும், பருக்கைக் கற்கள் போன்று, நன்கு பொரித்த பொரிக்கறிகளையும் கொடுத்து உண்ணச் செய்தான்.  கழுத்துவரை நிரம்பும்படி அவற்றை விழுங்கினோம்.  இவ்வாறு, அவனோடு பழகி, இனிதாக அங்கே தங்கி இருந்தபொழுது, கொல்லை நிலத்தில் உழுத கலப்பையின் முனையைப்போல் எங்கள் பற்கள் பகலும் இரவும் இறைச்சியைத் தின்றதால் முனை மழுங்கின. மூச்சு விடுவதற்கும் நேரமில்லாமல். நிரம்ப உணவைத் தின்றதால், நாங்கள் உணவையே வெறுத்தோம்.

 

ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல்


. . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஒரு நாள்,

'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய           120

 

செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என,

மெல்லெனக் கிளந்தனம் ஆக,

 

அருஞ்சொற்பொருள்:

120. செயிர்த்து கோபித்து; தெவ்வர் பகைவர்; திறை கப்பம்; போகிய முற்றுப் பெற்ற

121. சேறும் - செல்வோம்; தொல் பதி பழைய ஊருக்கு (எங்கள் ஊருக்கு); பெயர்தல் திரும்பிச் செல்லுதல்

122. கிளந்தனம் கூறினோம்

 

 

 

 

 

பதவுரை:

119. ஒரு நாள் ஒரு நாள்

120. 'செயிர்த்து எழு தெவ்வர் திறை துறை போகிய -‘கோபித்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற  

121. செல்வ! சேறும், எம் தொல் பதிப் பெயர்ந்து' என செல்வா! நாங்கள் எம்முடைய பழைய ஊருக்குப் புறப்பட்டுப் போகப் போகிறோம்என்று

122. மெல்லெனக் கிளந்தனம் ஆக - மெதுவாகச் சொன்னோம்.

கருத்துரை:

ஒரு நாள், ‘கோபித்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில் தேர்ச்சிபெற்ற செல்வா! நாங்கள் எம்முடைய பழைய ஊருக்குப் புறப்பட்டுப் போகப் போகிறோம்என்று மெதுவாகச் சொன்னோம்.

 

அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்


. . . . . . . . . . . . . . . . . . . '
வல்லே

அகறிரோ எம் ஆயம் விட்டு?' என,

சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு,

'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு            125

 

பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என,

தன் அறி அளவையின் தரத்தர, யானும்

என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு,

இன்மை தீர வந்தனென்.

 

அருஞ்சொற்பொருள்:

122. வல்லே விரைவில்

123. அகறிரோ போகின்றீரா; ஆயம் கூட்டம்

124. சிரறியவன் கோபித்தவன்; செயிர்த்தல் வருத்துதல்

125. துடிஉடுக்கை; அடி பாதம்; தூங்கு நடை அசையும் நடை; குழவி – (யானைக்) கன்று

126. பிடி பெண்யானை; புணர்தல் சேர்தல்; வேழம் ஆண்யானை; பெட்டவை விரும்பியவற்றை

127. அளவையின் அளவில்

128. அளவையின் அளவில்; வேண்டுவ வேண்டுவனவற்றை

129. இன்மை வறுமை; வந்த்னென் - வந்தேன்

 

பதவுரை:

122. 'வல்லே - ‘(இவ்வளவு)சீக்கிரம்

123. அகறிரோ எம் ஆயம் விட்டு?' என - எம் கூட்டத்தைவிட்டுப் போகின்றீரோ?’ என்று

124. சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு கோபித்தவனைப்போல் எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடன்

125. 'துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு -‘உடுக்கை போன்ற அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன்,                       

126. பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க!' என பெண்யானைகளைக் கூடின ஆண்யானைகளையும் நீங்கள் விரும்பிய மற்றவற்றையும் ஏற்றுக் கொள்வீராக' என்று

127. தன் அறி அளவையின் தரத்தர, யானும் - தான் அறிந்த அளவில் தரத்தர, நானும்

128. என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு நான் அறிந்த அளவில் எனக்கு வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு,

129. இன்மை தீர வந்தனென். - என் வறுமை முற்றிலும் அற்றுப்போக வந்தேன்.

 

கருத்துரை:

இவ்வளவு சீக்கிரம் எங்களைவிட்டுப் போகின்றீரோ?’ என்று கோபித்தவனைப்போல், எமக்கு வருத்தத்தைச் செய்த பார்வையுடன் கேட்டான்.  உடுக்கை போன்ற அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன், பெண்யானைகளையும், அவற்றோடு கூடின                                 ஆண்யானைகளையும் நீங்கள் விரும்பிய மற்றவற்றையும் ஏற்றுக் கொள்வீராக' என்று தான் அறிந்த அளவில் அளித்தான். நானும் நான் அறிந்த அளவில் எனக்கு வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு, என் வறுமை முற்றிலும் அற்றுப்போக வந்தேன்.

 

கரிகால் வளவனது சிறப்புக்கள்


. . . . . . . . . . . . . . . . .
வென் வேல்

உருவப் பல் தேர் இளையோன் சிறுவன்,                130

 

முருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,

தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,

எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,

பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி,                          135

 

வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,

பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்

நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,

 

 

 

அருஞ்சொற்பொருள்:

129. வென் வேல் வென்ற வேல்

130. உருவப் பல் தேர் இளையோன்உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்ற சோழ மன்னன் (கரிகாலனின் தந்தை).

131. சீற்றம் கோபம்; உரு - அச்சம்; குருசில் தலைவன்

132. தாயம் அரசுரிமை

133. எய்யா அறியாத; தெவ்வர் பகைவர்

134. செய்யார் ஏவல் செய்யாதவர்; தேஎயம் நாடு. தெருமரல் - மனச் சுழற்சி; கலிப்ப - பெருக

135. பவ்வம் - கடல்; மீமிசை மேல்

136. வெவ்வெஞ் செல்வன் மிகுந்த வெப்பத்தையுடைய கதிரவன்; விசும்புவானம்; படர்ந்தாங்கு சென்றாற்போல்

137. தவழ் - தவழ்தல்

138. செகில் தோள்

 

பதவுரை:

129. வென் வேல் - வென்ற வேலினையும்

130. உருவப் பல் தேர் இளையோன் சிறுவன் -           உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகனான சிறுவன்,           

131. முருகற் சீற்றத்து உரு கெழு குருசில் முருகனைப்போல் கோபத்தையுடைய அச்சம் பொருந்திய தலைவன்,           

132. தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி - தன் தாய் வயிற்றில் இருந்த போதே அரசவுரிமை பெற்றுப் பிறந்த

133. எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப - தன் வலிமை அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய,

134. செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப ஏவல் செய்யாத பகைவர் நாடுகளில் உள்ளோர் மனக்கவலை பெருக

135. பவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி -கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி,   

136. வெவ் வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு மிக்க வெப்பத்தையுடைய கதிரவன் விண்ணிற் சென்றாற் போன்று,

137. பிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன் - பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல

138. நாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப நாட்டைத் தன் தோளில் தாங்கி, அதை நாள்தோறும் வளரச் செய்ய

 

கருத்துரை:

உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகனான சிறுவன் கரிகாலன் முருகனைப்போல் கோபத்தையுடைய தலைவன். அவன் தன் தாய் வயிற்றில் இருந்தபொழுதே அரசுரிமை பெற்றுப் பிறந்தவன். அவன் வலியறியாத பகைவர்கள் அவன் ஏவல் கேட்டு நடக்க, அவன் ஏவல் கேட்க மறுத்தவர்களின் நாடுகளில் உள்ளவர்களின் மனக்கவலை பெருக, அவன் கடல்மேல் ஒளி பரப்பி எழுகின்ற கதிரவன்போலத் தோன்றுவான். அவன் பிறந்து தவழத் தொடங்கிய நாள் தொடங்கி, சிறந்த தன் நாட்டைத் தோளில் தாங்கி வளரச் செய்பவன். 

வெண்ணிப் போர் வெற்றி


ஆளி நல் மான் அணங்குடைக் குருளை

மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி                      140

 

முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,

தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,

இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை

அரவாய் வேம்பின் அம்குழைத் தெரியலும்,

ஓங்கு இருஞ்சென்னி மேம்பட மிலைந்த                 145

 

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்,

கண்ஆர் கண்ணி, கரிகால் வளவன்

தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்

தொழுது முன் நிற்குவிர் ஆயின்,                           150

 

 

 

அருஞ்சொற்பொருள்:

139. ஆளி யாளி என்னும் விலங்கு; மான் விலங்கு; அணங்கு துன்பம் செய்தல்; குருளை குட்டி

140. மீளி - எமன்; மொய்ம்பு - வலிமை; செருக்கி கர்வம் கொண்டு

141. கோள் கொள்ளல்; மாத்திரை மாத்திரத்தில்; ஞெரேரெனவிரைவாக

142. தலைக்கோள் வேட்டம் முதல் வேட்டை; அட்டாங்கு கொன்றாற்போல

143. இரு - கரிய; பனம் போந்தை பனங்குருத்து; சினை கிளை

144. தெரியல் மாலை

145. ஓங்கு நிமிர்ந்த; இருஞ் சென்னி பெரிய தலை; மிலைந்த அணிந்த

146. இரு பெரு வேந்தரும் சேரனும் பாண்டியனும்; அவிய அழிய

147. வெண்ணி போர் நடைபெற்ற ஊர்; வெருவரு அச்சம் உண்டாவதற்குக் காரணமான; நோன் தாள் வலிய முயற்சி

148. கண்ணி தலையில் அணியும் மாலை

149. மருங்கு - பக்கம்; அணுகுபு அணுகி; குறுகி நெருங்கி

150. நிற்குவிர் ஆயின்நிற்பீர்களானால்

 

 

பதவுரை:

139. ஆளி நல் மான் அணங்குடைக் குருளை யாளி என்னும் விலங்கின் துன்பத்தைச் செய்யும் குட்டி

140. மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி எமனைப் போன்ற வலிமையினால் கர்வம் கொண்டு,                   

141. முலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென தாயின் முலைப்பாலைக் குடிக்கும் பருவத்திலேயே விரைவாகப் பாய்ந்து,              

142. தலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு தன் முதல் வேட்டையிலேயே யானையைக் கொல்வதைப்போல

143. இரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை - கரிய பனைமரத்தின் குருத்தோலையைத் தலையில் அணிந்த சேரன், கரிய கிளைகளையும்  

144. அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும் இரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பையுமுடைய வேப்ப மரத்தின் அழகிய தளிராலான மாலையையும்

145. ஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த நிமிர்ந்த பெரிய தலையில் மேலாகத் தோன்றும்படி சிறப்பாகச் சூடிய பாண்டியன்       என்னும்          

146. இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய - இரு பெரிய மன்னர்களும் ஒரே போர்க்களத்தில் அழியும்படி

147. வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள் - வெண்ணி என்கிற ஊரில் போரிட்டு வென்றவனும், பகைவர்கள் அஞ்சுவதற்குரிய வலிய முயற்சியுடையவனும்,

148. கண் ஆர் கண்ணி, கரிகால் வளவன் - கண்நிறைந்த அழகிய ஆத்தி மாலையையுடையவனுமாகிய கரிகாற்சோழனின்

149. தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி - திருவடி நிழலின் பக்கத்தை அணுகி, நெருங்கி

150. தொழுது முன் நிற்குவிர் ஆயின் - வணங்கி, அவன் முன்னே நிற்பீர்களானால்     


கருத்துரை:

யாளி என்னும் விலங்கின் குட்டி, எமனைப் போன்ற வலிமையினால் கர்வம் கொண்டு, தாயின் முலைப்பாலைக் குடிக்கும் பருவத்திலேயே விரைவாகப் பாய்ந்து, தன் முதல் வேட்டையிலேயே யானையைக் கொல்லும் இயல்புடையது. அதைப்போல, கரிய பனைமரத்தின் குருத்தோலையைத் தலையில் அணிந்த சேரனையும், கரிய கிளைகளையும் இரம்பத்தின் வாயைப் போன்ற விளிம்பையும் உடைய வேப்ப மரத்தின் அழகிய தளிராலான மாலையையும் நிமிர்ந்த பெரிய தலையில் மேலாகத் தோன்றும்படி சிறப்பாகச் சூடிய    பாண்டியனையும் ஒரே போர்க்களத்தில் அழியும்படி வெண்ணி என்கிற ஊரில் போரிட்டு வென்றவன் கரிகாற்சோழன். அவன், பகைவர்கள் அஞ்சுவதற்குரிய வலிய முயற்சியுடையவன்; கண்நிறைந்த அழகிய ஆத்தி மாலையை அணிந்தவன். அவனுடைய திருவடி நிழலின் பக்கத்தை அணுகி, நெருங்கி வணங்கி, அவன் முன்னே நிற்பீர்களானால்      

 

சிறப்புக் குறிப்பு:

கரிகால் வளவனைப் பற்றிய செய்திகள் பின்னிணைப்பு – 1 இல் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

கரிகாலனது கொடையின் சிறப்பு

. . . . . . . . . . . . . . . . . . . பழுது இன்று,

ஈற்று ஆ விருப்பின், போற்றுபு நோக்கி, நும்

கையது கேளா அளவை, ஒய்யென,

பாசி வேரின் மாசொடு குறைந்த

துன்னல் சிதாஅர் நீக்கி, தூய

கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி,                    155

 

பெறல் அருங்கலத்தில் பெட்டாங்கு உண்க' என,

பூக்கமழ் தேறல் வாக்குபு தரத்தர,

வைகல் வைகல் கை கவி பருகி,

எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை

சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி,                        160

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை

வால் ஒளி முத்தமொடு பாடினி அணியக்

கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர்

ஊட்டு உளை துயல்வர, ஓரி நுடங்க,

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி,                     165

 

காலின் ஏழ் அடிப் பின் சென்று, 'கோலின்

தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு

பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த்

தண் பணை தழீஇய தளரா இருக்கை

நன் பல் ஊர நாட்டொடு, நன்பல்,                          170

 

வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக்கை,

வெருவரு செலவின், வெகுளி வேழம்

தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப்

பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென,

செலவு கடைக்கூட்டுதிர் ஆயின், பல புலந்து,             175

 

நில்லா உலகத்து நிலைமை தூக்கி,

'செல்க' என விடுக்குவன் அல்லன்

 

 

 

அருஞ்சொற்பொருள்:

150. பழுது – (முன் இருந்த) வறுமை

151. ஈற்றா ஈற்று + - கன்றை ஈன்ற பசு; விருப்பின் – (கன்றுக்குப் பால் தர வேண்டும் என்ற) விருப்பத்தோடு; போற்றுபு விரும்பி

152. கையது கையில் உள்ள; அளவை - முன்பே; ஒய் என விரைவாக

153. வேரின் வேரைப்போல; மாசொடு அழுக்கொடு

154. துன்னல் - தைத்தல்; சிதாஅர் - கந்தை

155. கொட்டைக் கரை முடிச்சுகளைக் கரையில் உடைய; நல்கி வழங்கி

156. பெட்டாங்கு விரும்பியபடி

157. தேறல் கள்ளின் தெளிவு; வாக்குபு - வார்த்து

158. வைகல் - நாள்

159. அகைந்த - தழைத்த; ஏடு இல் பொன்னால் செய்த தாமரை

160. பித்தை ஆணின் தலை மயிர்

161. வலத்தல் - கட்டுதல்; நுணங்கு நுட்பமான; அரில் ஒன்றோடு ஒன்று இணைந்தது

162. வால் - வெண்மை; முத்தம் முத்து; பாடினி விறலி (பாணனின் மனைவி)

163. கோடு - கொம்பு; கொடுஞ்சி தேரின் முன்பகுதியில் உள்ள அலங்கார உறுப்பு

164. உளை குதிரையின் தலையாட்டம் என்னும் அணி; ஊட்டுளை சாயமேற்றிய தலையாட்டம்; துயல்வருதல் அசைதல்; ஓரி குதிரையின் பிடரிமயிர்; நுடங்க - அசைய

165. நால்கு நான்கு

167. தாறு - முடுக்கும் கோல்; வீறு - பெருமை

168. பேர் யாழ் பெருமைக்குரிய யாழை வாசிப்பவர்களைக் குறிக்கிறது; கழிப்பி போக்கி (தந்துவிட்டு); நீர்வாய் நீர்வளம் நிறைந்த

169. தண்பணை மருத நிலம்; தழீஇய - தழுவிய; தளராவளம் குறைந்து தளராமல்; இருக்கை குடியிருப்பு (ஊர்)

171. வெரூஉ - அச்சம்; நுவலும் முழங்கும்; பரூஉ பருத்த

172. வெருவரு அச்சம் உண்டாக்கும்; செலவு - நடை; வெகுளி - கோபம்; வேழம் யானை

173. தரவு தருதல்; ஓவிலன் ஒழிதலிலன்; வரவிடை வருவாய் தோன்றியவிடத்து

174. தெற்றன விரைவாக

175. செலவு நடை, ஓட்டம்; கடைக்கூட்டுதல் - முடிவு செய்தல்; புலந்து வருத்தப்பட்டு

176. தூக்கி ஆராய்ந்து

177. விடுக்குவன் - விடுவான்

 

பதவுரை:

150. பழுது இன்று - உம் வறுமை நீங்க                      

151. ஈற்று ஆ விருப்பின், போற்றுபு நோக்கி, நும் - ஈன்ற பசு அதன் கன்றை நோக்கும் விருப்பம் போன்ற விருப்பத்தோடு உம்மை விரும்பிப் பார்த்து, உம்

152. கையது கேளா அளவை, ஒய்யென கையில் உள்ள இசைக் கருவியின் ஒலியைக் கேட்டு முடிப்பதற்கு முன்னரே, விரைந்து

153. பாசி வேரின் மாசொடு குறைந்த - பாசியின் வேர்போல் கிழிந்து, அழுக்குடன், குறைந்த

154. துன்னல் சிதாஅர் நீக்கி, தூய - தையலையுடைய துணிகளை நீக்கி, தூய

155. கொட்டைக் கரைய பட்டு உடை நல்கி -     குஞ்சம் உள்ள கரையையுடைய பட்டு உடைகளை அளித்து                 

156. பெறல் அருங் கலத்தில் பெட்டாங்கு உண்க' என - பெறுதற்கரிய (பொற்)கலத்தில் விரும்பிய மட்டும் உண்பாயாக' என்று,

157. பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர - பூமணம் வீசும் தெளிந்த கள்ளை மேலும்மேலும் வார்த்துத் தரத்தர,

158. வைகல் வைகல் கை கவி பருகி - தினம் தினம், ’வேண்டாம் வேண்டாம்என்று கையைக் கவிழ்க்கும் அளவிற்குக் குடித்து,

159. எரி அகைந்தன்ன ஏடு இல் தாமரை - நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை (பொன்னாலான தாமரையை),

160. சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி - சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,                        

161. நூலின் வலவா நுணங்கு அரில் மாலை - நூலால் தொடுக்கப்படாத நுண்மையினையும் பிணக்கத்தையும் உடைய பொன்னரிமாலையை

162. வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய - வெண்மையான ஒளியையுடைய முத்துகளோடு பாடினி சூடத் தந்து,

163. கோட்டின் செய்த கொடுஞ்சி நெடுந் தேர் - தந்தத்தால் செய்த கொடுஞ்சியையுடைய நெடிய தேரில்

165. பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி பால் போன்ற வெண்ணிறமான குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி

166. காலின் ஏழ் அடிப் பின் சென்று - தன் காலால் ஏழு அடி பின்னே வந்து,

167. தாறு களைந்து, ஏறு' என்று ஏற்றி, வீறு பெறு தார்க்குச்சியில் உள்ள முள்ளை நீக்கிவிட்டு, ‘இவ்வாறு ஏறுவாயாக' எனக் காட்டி ஏறச்செய்து, சிறந்த

168. பேர் யாழ் முறையுளிக் கழிப்பி, நீர் வாய்த் - யாழ்ப்பாணர்க்குக் கொடுக்கும் பரிசுகளை உனக்குக் கொடுத்துவிட்டு, நீர்வளம் பொருந்திய

169. தண் பணை தழீஇய தளரா இருக்கை - மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய

170. நன் பல் ஊர நாட்டொடு, நன் பல் - நல்ல பல ஊர்களையுடைய நாடுகளுடனே, நல்ல பல,

171. வெரூஉப் பறை நுவலும், பரூஉப் பெருந் தடக் கை அச்சம் உண்டாக்கும் பறைகள் முழங்குவதற்குக் காரணமான, பருத்த பெரிய வளைவினையுடைய துதிக்கையினையும்,

172. வெருவரு செலவின், வெகுளி வேழம் - அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை

173. தரவிடைத் தங்கல் ஓவிலனே: வரவிடைப் - கொடை அளிப்பதில் இவன் ஒழிவில்லாதவன். உமக்கு வருவாய் தோன்றியபொழுது

174. பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி, தெற்றென நீங்கள் பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக

175. செலவு கடைக்கூட்டுதிர்ஆயின், பல புலந்து -        உமது பயணத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நீங்கள் முடிவு கட்டினால், அவன் பலமுறை வருத்தப்பட்டு,       

176. நில்லா உலகத்து நிலைமை தூக்கி நிலையில்லாத இவ்வுலகின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,

177. 'செல்க' என விடுக்குவன் அல்லன் உங்களைச் செல்ல விட மாட்டான்.

 

கருத்துரை:

பசு தன் கன்றை விருப்பத்தோடு பார்ப்பதைப்போல் உம்மை விரும்பிப் பார்த்து, உம் கையில் உள்ள இசைக் கருவியின் ஒலியைக் கேட்டு முடிப்பதற்கு முன்னரே, விரைந்து, பாசியின் வேர்போல் கிழிந்து, அழுக்குடன் உள்ள உங்கள் உடைகளை நீக்கித் தூய குஞ்சம் உள்ள கரையையுடைய பட்டாடைகளை அளிப்பான். ’விரும்பிய மட்டும் உண்பாயாகஎன்று கூறிப் பொற்கலத்தில், பூமணம் வீசும் தெளிந்த கள்ளை மேலும்மேலும் வார்த்துத் தருவான். நாள்தோறும், போது -மென்ற அளவுக்குக் குடித்த பிறகு, பொன்னாலான தாமரையை உங்கள் தலையில் சூட்டுவான். பொற்கம்பிகளால் தொடுத்த முத்துமாலையைப் பாடினிக்குக் கொடுப்பான்.

தன் காலால் ஏழடி பின்னே வந்து, தந்தத்தாலான கொடுஞ்சியையுடைய, வெண்ணிறமான நான்கு குதிரைகள் பூட்டிய தேரைத் தருவான். பெருமைக்குரிய யாழ்ப்பாணர் -களுக்கு அளிக்கும் பரிசுகளைப் போன்ற பரிசுகளை அளிப்பான். நீர்வளம் பொருந்திய மருத நிலம் சூழ்ந்த குடியிருப்புகளை -யுடைய நல்ல பல ஊர்களையுடைய நாடுகளையும், அச்சம் தரும் ஓட்டத்தையுடைய யானைகளையும் அளிப்பான். இவ்வாறு ஓயாமல் பரிசளிப்பான். நீங்கள் பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக உமது பயணத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நீங்கள் முடிவுகட்டினால், அவன் வருத்தப்பட்டு, நிலையில்லாத இவ்வுலகின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து, உங்களைச் செல்ல விட மாட்டான்.

 

சிறப்புக் குறிப்பு:

ஏடு இல் தாமரை என்றது இயற்கையான இதழ்கள் இல்லாமல் செயற்கையான இதழ்கள் உள்ள பொன்னாலான தாமரையைக் குறிக்கிறது.

 

நூலின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஒளி முத்தமொடு பாடினி அணியஎன்றது நூலால் தொடுக்கப்படாமல், பொற்கம்பியால் தொடுக்கப்பட்ட வெண்மையான ஒளியையுடைய முத்துமாலை பாடினி அணிவதற்குக் கொடுக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

 

சோழ நாட்டின் வளமும் வனப்பும்

. . . . . . . . . . . .  ஒல்லெனத்

திரை பிறழிய இரும் பௌவத்துக்

கரை சூழ்ந்த அகன் கிடக்கை,

மா மாவின் வயின் வயின் நெல்,                          180

தாழ் தாழைத் தண் தண்டலை,

கூடு கெழீஇய, குடிவயினான்,

செஞ் சோற்ற பலி மாந்திய

கருங் காக்கை கவவு முனையின்,

மனை நொச்சி நிழல் ஆங்கண்,                           185

 

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்;

இளையோர் வண்டல் அயரவும்; முதியோர்

அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்

முடக் காஞ்சிச் செம் மருதின்,

மடக் கண்ண மயில் ஆலப்,                                 190

பைம் பாகற் பழம் துணரிய

செஞ் சுளைய கனி, மாந்தி;

அறைக் கரும்பின் அரி நெல்லின்

இனக் களமர் இசை பெருக,

வறள் அடும்பின் இவர் பகன்றைத்                         195

தளிர்ப் புன்கின் தாழ் காவின்

நனை ஞாழலொடு மரம் குழீஇய

அவண் முனையின், அகன்று மாறி,

அவிழ் தளவின் அகன் தோன்றி,

நகு முல்லை, உகு தேறு வீ,                                200

பொன் கொன்றை, மணிக் காயா,

நல் புறவின் நடை முனையின்,

சுற வழங்கும் இரும் பௌவத்து

இறவு அருந்திய இன நாரை

பூம் புன்னைச் சினைச் சேப்பின்,                          205

 

 

ஓங்கு திரை ஒலி வெரீஇ,

தீம் பெண்ணை மடல் சேப்பவும்;

கோட் தெங்கின், குலை வாழை,

கொழுங் காந்தள், மலர் நாகத்து,

துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து,                             210

 

யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப,

கலவம் விரித்த மட மஞ்ஞை

நிலவு எக்கர்ப் பல பெயர;

 

அருஞ்சொற்பொருள்:

177. ஒல்லெனஒலிக்குறிப்பு

178. திரை - அலை; பிறழியமுறிந்த, புரளுகின்ற; இரும் - கரிய; பௌவம்கடல்

179. அகன் - அகன்ற; கிடக்கைஊர், நிலப்பரப்பு

180. மாநிலம், நில அளவு; (மா = 145.2 சதுர அடி; 3 மா = 1 Acre) வயின்வயின்இடங்கள்தோறும்

181.தாழைதென்னை; தண்குளிர்ந்த; தண்டலைசோலை

182. கூடுகுதிர்; கெழீஇயபொருந்திய; குடிவயினான்குடிமக்களிடத்தில்

183. செஞ் சோற்றஉதிரத்தோடு (இரத்தத்தோடு) கலந்த சோற்றை; பலிகாக்கைக்கு இடும் சோறு; மாந்தியஉண்ட

184. கவவுதல் - தின்றல்; முனையின்வெறுத்தால்

185. நொச்சிநொச்சி மரம்

186. ஈற்றுஈனுதலையுடைய; யாமை - ஆமை; பார்ப்பு - குட்டி; ஓம்பபாதுகாத்து வைக்க

187. இளையோர்இளைய உழவர் மகளிர்; வண்டல்விளையாடும் இடம்; அயர்தல்விளையாடுதல்

188. பகை முரண்பகையால் வந்த மன வேறுபாடு; செலவும்போக

189. முடக் காஞ்சிவளைந்து வளர்ந்த காஞ்சி மரம்; செம்மருதுசெம்மை நிறம் பொருந்திய மருத மரம்

190. மடக் கண்ண - இளமையுடைய கண்; ஆலஆட

191. பைம் பாகல் -பசிய பாகல்; துணறியகொத்தாகவுள்ள

192. செஞ் சுளைசிவந்த சுளை; மாந்தி - உண்டு

193. அறை - அறுத்தல்; அரிதல் - அறுத்தல்

194. இனம்கூட்டம்; களமர்மருதநில மக்கள், இசை - ஓசை

195. வறள் - வறட்சி; அடும்பு - அடும்பங் கொடி; இவர்தல் - படர்தல்; பகன்றைபகன்றைக் கொடி

196. புன்குபுன்க மரம்; காசோலை

197. ஞாழல்ஒருவகைக் கொன்றை மரம்; குழீஇயகூட்டமாக

198. அவண்அவ்விடம்; முனையின்சலிப்பு ஏற்பட்டால் (வெறுத்தால்)

199. தளவு - செம்முல்லை; அகன்அகன்ற, தோன்றி - காந்தள்

200. நகுஒளி பெற்ற; உகு - உதிரும்; தேறுவீதேற்றாம்பூ

201. கொன்றைகொன்றை மரம்; மணிக் காயா நீலமணி போன்ற காயா மலர்

202. புறவு - முல்லைநிலம்; நடைஒழுக்கம்; முனையின்சலிப்பு ஏற்பட்டால் (வெறுத்தால்)

203. சுற - சுறா; வழங்கும் - உலாவும்; இரும் - கரிய; பௌவம்கடல்

204. இறவுஇறால் மீன்; அருந்திய - தின்ற; இன நாரைநாரைகளின் கூட்டம்

205. புன்னை - புன்னை மரம்; சினை - கிளை; சேப்பின்தங்கினால்

206. ஓங்கு - உயர்ந்த; திரை - அலை; வெரீஇஅஞ்சி

207. தீம் - இனிமை; பெண்ணை - பனை; சேப்ப - தங்க

208. கோள்காய்; தெங்கு - தென்னை.

209. கொழுங் காந்தள்கொழுவிய காந்தள்; நாகம்சுரபுன்னை

210. துடி - உடுக்கை; குடிஞை - ஆந்தை; பாக்கம்கடல் சார்ந்த ஊர்

211. கொளைபாட்டு

212. கலவம் - தோகை; மட மஞ்ஞைஇளைய மயில்

213. எக்கர் - மேடு; பெயரசெல்ல

 

பதவுரை:

177. ஒல்லென - ஒல் என்னும் ஓசையுண்டாக

178. திரை பிறழிய இரும் பௌவத்துஅலைகள் புரளும் கரிய கடலின்

179. கரை சூழ்ந்த அகன் கிடக்கை - கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,

180. மா மாவின் வயின் வயின் நெல் -            ஒவ்வொரு மா அளவிலான நிலங்கள்தோறும், நெல்லும்

181. தாழ் தாழைத் தண் தண்டலை - தாழ்ந்த தென்னையுமுடைய குளிர்ந்த சோலைகளிடத்தே

182. கூடு கெழீஇய, குடிவயினான்குதிர்கள் பொருந்தின வளமிக்க குடியிருப்புகளில்

183. செஞ் சோற்ற பலி மாந்திய - உதிரத்தோடு கலந்த சோற்றையுடைய படையலை விழுங்கின

184. கருங் காக்கை கவவு முனையின் - கரிய காக்கை அந்த உணவை வெறுத்ததால்,

185. மனை நொச்சி நிழல் ஆங்கண் - மனையைச் சூழ்ந்த நொச்சியின் நிழலில்,                                                       

186. ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் -(மணலுக்குள்) முட்டையைப் பொரித்த ஆமையின் குஞ்சைப் பின்னர் தின்பதற்காக பாதுகாத்து வைக்கவும்,

187. இளையோர் வண்டல் அயரவும்; முதியோர் - இளையோர் மணல்வீடு கட்டி விளையாடவும், முதியோர்

188. அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் - (நீதி வேண்டி) அவைக்களம் புகும்பொழுதிலேயே பகைக்குக் காரணமான வேறுபாடுகள் எல்லாம் போகவும்

189. முடக் காஞ்சிச் செம் மருதின் - முடக்காஞ்சி மரத்திலும், செம்மருத மரத்திலும் இருந்த,

190. மடக் கண்ண மயில் ஆலஇளமையான கண்களையுடைய மயில் ஆரவாரிக்க              

191. பைம் பாகற் பழம், துணரிய - பசிய பாகற் பழத்தினுள் கொத்துக்கொத்தாக உள்ள,

192. செஞ் சுளைய கனி, மாந்தி - சிவந்த சுளைகளைக் கொண்ட பழத்தைத் தின்று

193. அறைக் கரும்பின் அரி நெல்லின் - அறுத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும்,

194. இனக் களமர் இசை பெருக - உழவரின் கூட்டம் மிகுதியாக ஒலிப்பதால்

195. வறள் அடும்பின் இவர் பகன்றை - வறண்ட இடத்தில் எழுந்த அடும்பினையும், படர்கின்ற பகன்றையினையும்

196. தளிர்ப் புன்கின் தாழ் காவின் - தளிரையுடைய புன்கினையும், தாழ்ந்த சோலைகளையும்

197. நனை ஞாழலொடு மரம் குழீஇய - தளிர்விட்ட ஞாழலோடு, (ஏனை)மரங்களும் கூட்டமாக உள்ள

198. அவண் முனையின், அகன்று மாறிஅவ்விடத்தில் சலிப்பு உண்டானால், அவ்விடத்தைவிட்டு நீங்கி மாறிப்போய்,

199. அவிழ் தளவின் அகன் தோன்றிஇதழ் விரிந்த செம்முல்லையினையும், விரிந்த காந்தள் மலரினையும்,

200. நகு முல்லை, உகு தேறு வீ -        மலர்கின்ற முல்லையினையும், உகுகின்ற தேற்றா மலரினையும்,                    

201. பொன் கொன்றை, மணிக் காயா - பொன்னிறமுடைய கொன்றை மலரினையும், நீலமணி போன்ற காயா மலரினையும் உடைய,

202. நல் புறவின் நடை முனையின்- நல்ல முல்லைக் காட்டில் சென்று வாழ்வது சலித்துப் போனால்,

203. சுற வழங்கும் இரும் பௌவத்துசுறாமீன்கள் திரியும் கரிய கடலில்

204. இறவு அருந்திய இன நாரைஇறால் மீன்களைத் தின்ற கூட்டமாகிய நாரைகள்

205. பூம் புன்னைச் சினைச் சேப்பின் - பூக்களையுடைய புன்னையின் கிளைகளில் தங்கினால்,                                              

206. ஓங்கு திரை ஒலி வெரீஇஓங்கி வீசும் அலைகளின் ஆரவாரத்திற்கு அஞ்சி,

207. தீம் பெண்ணை மடல் சேப்பவும் - இனிய பனை மரத்தின் மடலில் தங்கவும்,

208. கோட் தெங்கின், குலை வாழைகொத்துக்கொத்தாகக் காய்த்த தென்னை மரங்களின் காய்க் குலைகளையும், வாழையையும்

209. கொழுங் காந்தள், மலர் நாகத்து - கொழுவிய காந்தளையும், மலர்ந்த சுரபுன்னையையும்,

210. துடிக் குடிஞை, குடிப் பாக்கத்து - உடுக்கை ஓசை போன்ற ஓசையையுடைய பேராந்தையையும் உடைய நெய்தல் நிலத்து ஊர்களில்                                          

211. யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப யாழ் ஓசை போன்ற வண்டின் பாட்டுக்கேற்ப,

212. கலவம் விரித்த மட மஞ்ஞை - தோகையை விரித்த இளைய மயில்

213. நிலவு எக்கர்ப் பல பெயரநிலவு போன்ற நிறமுள்ள மணல்மேட்டில் பலவாக இடம் பெயர்ந்து செல்கிறது.

 

கருத்துரை:

ஒல் என்னும் ஓசையோடு அலைகள் புரளும் கரிய கடலின் கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில் சோழநாடு உள்ளது. அங்கு, மருத நிலத்தில் உள்ள ஒவ்வொரு மா அளவிலான நிலங்கள்தோறும், நெல்லும், தென்னையுமுடைய குளிர்ந்த சோலைகளில் உள்ள குடியிருப்புகளில் நெற்குதிர்கள் இருக்கும். அந்தக் குடியிருப்பகளில் வாழும் மக்கள் உதிரத்தோடு கலந்த சோற்றைக் காக்கைக்குப் படையலாக அளிப்பர். அந்தச் சோற்றை விழுங்கிய காக்கை, அந்த உணவை வெறுத்து, நொச்சி மரத்து நிழலில் தங்கி, நெய்தல் நிலத்தில் முட்டையைப் பொரித்த ஆமையின் குஞ்சைப் பிறகு உண்ணலாம் என்று பாதுகாத்து வைக்கவும், மருதநிலத்து இளைய மகளிர் நெய்தல் நிலத்து மணற்குன்றுகளில் விளையாடவும், பகைமைகொண்ட முதியோர் நீதி வேண்டி அவைக்களம் புகும்பொழுதிலேயே தம் உள்ளத்து மாறுபாட்டைப் போக்கும்படியாகவும் ஆட்சி செலுத்துபவன் கரிகாலன்.

குறிஞ்சி நிலப்பறவையாகிய மயில், மருதநிலத்துக் காஞ்சிமரத்திலும் மருதமரத்திலும் இருந்து, பசிய பாகற்பழத்தின் கொத்துக்கொத்தாக உள்ள சிவந்த சுவைகளைத் தின்று ஆரவாரிக்கும். அங்கு, கரும்பை அறுப்பவர்களும், வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர்களும் எழுப்பும் ஒலி மிகுதியாக இருப்பதால், அங்கிருந்து அந்த மயில் அகன்று, வறண்ட இடத்தில் வளரும் அடும்பும், படர்கின்ற பகன்றையும், தளிர்களையுடைய புன்கும், தாழ்ந்த சோலைகளும், ஞாழலும் ஏனை மரங்களும் நிறைந்த இடத்திற்குச் செல்லும். பின்னர் அந்த இடத்தையும் வெறுத்து, அங்கிருந்து அகன்று, செம்முல்லை, காந்தள், முல்லை, தேற்றா, கொன்றை மற்றும் காயா மலர்களும் உள்ள முல்லைக் காட்டுக்குச் செல்லும்.  அந்த இடத்தில் இருப்பதும் சலித்துப் போனால், அந்த மயில் சுறா மீன்கள் திரியும் கடற்கரைக்குச் செல்லும். அந்தக் கடலில், இறால் மீன்களைத் தின்ற நாரைகளின் கூட்டம் பூக்களையுடைய புன்னையின் கிளைகளில் தங்கும். புன்னையின் கிளைகளில் தங்கிய நாரைகள், ஓங்கி வீசும் கடலலைகளின் ஆரவாரத்திற்கு அஞ்சிப் பனை மரத்தின் மடலில் சென்று தங்கும்.

கொத்துக்கொத்தாகக் காய்த்த தென்னை மரங்களின் காய்க்குலைகளும், கொழுவிய காந்தளும், மலர்ந்த சுரபுன்னையும், உடுக்கையின் ஓசை போன்ற ஓசையையுடைய பேராந்தையும் உடைய நெய்தல் நிலத்து ஊர்களில் யாழிசை போன்ற வன்டுகளின் இன்னிசையைக் கேட்டு, அவ்விசைக்கேற்ப மணல்மேடுகளின் மேலே, மயில் தோகையை விரித்து ஆடும்.

சிறப்புக் குறிப்பு:

ஒரு திணையில் உள்ள கருப்பொருள்கள் மற்றொரு திணையில் வந்தால் அதைத் தொல்காப்பியம் திணைமயக்கம் என்று கூறுகிறது. திணைமயக்கத்தைப் பற்றிய விளக்கத்தைப் பின்னிணைப்பு – 2 இல் காணலாம்.

 

 

 

நில மயக்கமும் நல் ஆட்சியும்


தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர்

மீன் நெய்யொடு நறவு மறுகவும்;                                 215

தீங் கரும்போடு அவல் வகுத்தோர்

மான் குறையொடு மது மறுகவும்;

குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல்

நறும் பூங் கண்ணி குறவர் சூட;

கானவர் மருதம் பாட, அகவர்                                       220

நீல் நிற முல்லைப் பஃறிணை நுவல;

கானக் கோழி கதிர் குத்த,

மனைக் கோழி தினைக் கவர;

வரை மந்தி கழி மூழ்கக்,

கழி நாரை வரை இறுப்ப;                                             225

தண் வைப்பின் நால் நாடு குழீஇ,

மண் மருங்கினான் மறு இன்றி,

ஒரு குடையான் ஒன்று கூறப்,

பெரிது ஆண்ட பெருங் கேண்மை,

அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்,                 230

 

அன்னோன் வாழி, வென் வேல் குருசில்!

 

அருஞ்சொற்பொருள்:

214. தேன் நெய்தேன்; மாறியோர்விற்றவர்

215.மீன் நெய்மீனின் கொழுப்பிலிருந்து உண்டாக்கிய நெய்; நறவு - கள்; மறுகவாங்கிச் செல்ல

216. தீங் கரும்புஇனிய கரும்பு; வகுத்தோர்கூறுபடுத்தி விற்றவர்கள்

217. குறைதசைத் துண்டு; மறுகவாங்கிச் செல்ல

218. குறிஞ்சிகுறிஞ்சிப் பண்; பரதவர்நெய்தல் நிலத்தோர்

219. கண்ணிதலையில் அணியும் மாலை; குறவன்குறிஞ்சி நிலத்து ஆண்மகன்

220. கானவர்முல்லை நிலமக்கள்; மருதம்மருதப் பண்; அகவர்மருத நிலத்திலுள்ள பாட்டுக்காரர்கள்

221. பஃறிணைபல்+திணைபலவகையாகிய; நுவலுதல்சொல்லுதல் (புகழுதல், பாடுதல்)

222. கானக் கோழிமுல்லை நிலத்துக் காட்டுக் கோழி

223. கவர்தல்தின்னுதல்

224. வரை - மலை; மந்திகுரங்கு

225. கழிகடற்கரை அருகில் உள்ள நீண்ட நீரோடைகள்; வரை - மலை; இறுப்பதங்க

226. தண்குளிர்ந்த; வைப்புஇடம்; குழீஇகூடி

227. மருங்கு - இடம்; மறுகுற்றம்

228. ஒன்று கூறுதல்தன் ஆணை ஒன்றினையே உலகம் கூறுதல்

229. கேண்மை - நட்பு

230. புணர்ந்த - பொருந்திய; திறன்வழி

231. வென் வேல்வெல்கின்ற வேல்; குருசில்தலைமையுடையவன்

 

பதவுரை:

214. தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் தேனையும் கிழங்கையும் விற்றவர்கள்

215. மீன் நெய்யொடு நறவு மறுகவும் - மீனின் நெய்யோடு கள்ளையும் பண்டமாற்றாகக் கொண்டு போகவும்

216. தீங் கரும்போடு அவல் வகுத்தோர் - இனிய கரும்போடு அவலைக் கூறுபடுத்தி விற்றோர்,

217. மான் குறையொடு மது மறுகவும் - மானின் தசையோடு கள்ளையும் பண்டமாற்றாகக் கொண்டு போகவும்,

218. குறிஞ்சி பரதவர் பாட, நெய்தல் - குறிஞ்சிப்பண்ணைப் நெய்தல் நிலத்தவர் பாடவும், நெய்தல் நிலத்து

219. நறும் பூங் கண்ணி குறவர் சூட - மணமுள்ள பூவால் தொடுத்த, தலையில் அணிந்த மாலையைக் குறிஞ்சி நிலத்தவர் சூடவும்,

220. கானவர் மருதம் பாட, அகவர் - முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, மருத நிலத்திலுள்ள பாடகர்கள்                        

221. நீல் நிற முல்லைப் பஃறிணை நுவல - நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவகையான காட்டுநிலத்தைக் கொண்டாடவும்

222. கானக் கோழி கதிர் குத்த முல்லைக் காட்டுக் கோழிகள் மருத நிலத்துக் கதிர்களைக் கொத்தித் தின்னவும்,

223. மனைக் கோழி தினைக் கவர மருத நிலத்து மனைக் கோழிகள் முல்லை நிலத்தில் விளைந்த தினையைத் தின்னவும்,

224.வரை மந்தி கழி மூழ்க மலையில் உள்ள குரங்குகள் நெய்தல் நிலத்துக் கழியில் மூழ்கவும்,

225. கழி நாரை வரை இறுப்ப -           நெய்தல் நிலத்துக் கழியில் திரியும் நாரைகள் மலையில் கிடக்கவும்                  

226. தண் வைப்பின் நால் நாடு குழீஇ - குளிர்ந்த ஊர்களையுடைய நிலப்பகுதிகளையுடைய நான்கு வகையான நாடுகள் சேர்ந்த

227. மண் மருங்கினான் மறு இன்றி (இம்)மண்ணுலகத்தில், குற்றமின்றி,

228. ஒரு குடையான் ஒன்று கூற ஒரு குடையால் தன் ஆணை ஒன்றையே உலகம் கூறும்படியாகவும்

229. பெரிது ஆண்ட பெருங் கேண்மை - நெடுங்காலம் ஆண்ட பெரிய நட்பையும்

230. அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் -அறத்தோடு பொருந்திய நெறியை உலகம் அறிதற்குக் காரணமான செங்கோலையும் உடைய,      

231. அன்னோன் வாழி, வென் வேல் குருசில்! – அக் கரிகாற் பெருவளத்தான்,வாழ்வானாக,வெல்கின்ற வேற்படையயுடைய தலைவன்,

 

கருத்துரை:

குறிஞ்சி நிலத்து மக்கள் தேனையும் கிழங்கையும் நெய்தல் நிலத்துக்குக் கொண்டுசென்று விற்று, பண்டமாற்றாக மீனின் நெய்யையும் கள்ளையும் வாங்கி வருவர். மருத நிலத்தைச் சார்ந்தவர்கள் இனிய கரும்பையும் அவலையும் குறிஞ்சி நிலத்துக்குக் கொண்டு சென்று விற்று, பண்டமாற்றாக மானின் தசையையும் கள்ளையும் வாங்கி வருவர். குறிஞ்சிப் பண்ணை நெய்தல் நிலத்தவர் பாடுவர். நெய்தல் நிலத்து மலரால் தொடுத்த மாலையை குறிஞ்சி நிலத்தவர் சூடுவர். முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, மருத நிலத்திலுள்ள பாடகர்கள் நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவகையான காட்டுநிலத்தைக் கொண்டாடுவர். முல்லைக் காட்டுக் கோழிகள் மருத நிலத்துக் கதிர்களைக் கொத்தித் தின்னும். மருத நிலத்து மனைக் கோழிகள் முல்லை நிலத்தில் விளைந்த தினையைத் தின்னும். மலையில் உள்ள குரங்குகள் நெய்தல் நிலத்துக் கழியில் மூழ்கும். நெய்தல் நிலத்துக் கழியில் திரியும் நாரைகள் மலையில் தங்கும். குளிர்ந்த ஊர்களையுடைய நிலப்பகுதிகளையுடைய நான்கு வகையான நாடுகள் சேர்ந்த இடம் சோழ வளநாடு. அவ்வாறு இவ்வுலகத்தைக் குற்றமின்றிப் பாதுகாப்பவன் கரிகாலன்.   தன்னுடைய குடை ஒன்றே எங்கும் பரவ, அனைவரும் அவனுடைய ஆணை ஒன்றையே கூற, பெருமையுடன் ஆட்சி புரிந்த மிக்க அன்பையும் அறத்தோடு கூடிய ஆட்சித் திறத்தை அறிந்த செங்கோலை உடைய அந்தக் கரிகாலன் வாழ்வானாக! வெல்லுகின்ற வேற்படையை உடைய மன்னன் அவன்.

காவிரியின் வெள்ளச் சிறப்பு

மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்

எல்லை தருநன் பல் கதிர் பரப்பி,

குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,

அருவி மாமலை நிழத்தவும், மற்று அக்                              235

கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,

பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,

துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி,

நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகுதொறும்,  240

 

புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய

அருஞ்சொற்பொருள்:

232. மன்னர்பகை மன்னர்; பன்மாண்பலவாக மாட்சிமைப்பட்ட

233. எல்லைபகல்; தருநன்தருகின்ற

234. குல்லை - கஞ்சங்குல்லை கோடுமரக் கிளை; எரி - தீ; நைத்தல்சுட்டழித்தல்

235. மா - பெரிய; நிழத்தஇல்லையாக(இழக்க), அழித்தல்

236. கருவிதொகுதி; கடற்கோள்கடலில் நீர் முகத்தல்; மறப்ப - மறக்க

237. வறன் - வறட்சி; பண்புநற்குணம்; காலைகாலம்

238. நறை - ஒருவகை நறுமணக் கொடி; நரந்தம் - ஒருவகை நறுமணப் புல்; ஆரம்சந்தனம்

239. பொறை - சுமை; உயிர்த்து - இளைப்பாறி

240. குரைப்புனல்ஆரவாரத்தையுடைய நீர்; வரைப்பு மடு (பள்ளம்); புகுதொறும்புகுந்தோறும்

241. புனல் - நீர்; கதுமென - விரைவாக; குடையமூழ்கி விளையாட

 

பதவுரை:

232. மன்னர் நடுங்கத் தோன்றி, பன்மாண்பகை மன்னர்கள் நடுங்கும்படி விளங்கி, பல்வேறு மாண்புகளையுடைய

233. எல்லை தருநன் பல் கதிர் பரப்பி - பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பல கதிர்களைப் பரப்புவதால்

234. குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும் - கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கிளைகளை நெருப்புத் தின்னவும்,

235. அருவி மா மலை நிழத்தவும், மற்று அக்   - பெரிய மலைகளில் அருவிகள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப் போகவும், இவை ஒழிந்த

236. கருவி வானம் கடற்கோள் மறப்பவும் - கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்

237. பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் - பெரும் பஞ்சம் உண்டாகியதால் நற்பண்புகள் இல்லாத காலத்தும்

238, நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் - நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும்

239. துறைதுறைதோறும், பொறை உயிர்த்து ஒழுகி துறைகள்தோறும் துறைகள்தோறும், (தனக்குச்) சுமையானவற்றை ஒதுக்கி, இளைப்பாறி இயங்கி

240. நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம் புகுதொறும் - நுரையைத் தலையில் உடைய ஆரவாரத்தையுடைய காவிரி நீர் குளத்திலும் மடுக்களிலும் புகுந்தொறும்

241. புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடையநீராடும் மகளிர் விரைவாக மூழ்கி விளையாட

 

கருத்துரை:

பகை மன்னர்கள் நடுங்கும்படி விளங்குபவன் கரிகாலன். பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பல கதிர்களைப் பரப்புவதால் தோன்றும் வெப்பத்தால், கஞ்சங் குல்லை தீயலாம்; மரங்களின் கிளைகள் தீக்கு இரையாகலாம்; பெரிய மலைகளில் அருவிகள் கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப் போகலாம்; மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கலாம். பெரும் பஞ்சம் உண்டாகியதால் நற்பண்புகள் இல்லாமற் போகலம். அத்தகைய வறட்சியான காலத்திலும், காவிரி ஆறு நறைக்கொடியும், நரந்தம் புல்லும், அகிலும், சந்தனமும் ஆகிய சுமைகளைத் துறைகள்தோறும் இறக்கி வைத்துவிட்டு, இளைப்பாற்றிக்கொள்ளும்.  நுரையைத் தலையிலே உடைய, ஆரவாரத்தையுடைய காவிரி ஆற்று நீர், குளத்திலும் மடுக்களிலும் புகுந்தோறும், அங்குள்ள நீரில்,  மகளிர் விரைவாக, மூழ்கி விளையாடுவர்.

 

காவிரி நாட்டு வயல் வளம்


கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,

சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,

குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை

கடுந் தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்,          245

 

சாலி நெல்லின், சிறை கொள் வேலி,

ஆயிரம் விளையுட்டு ஆகக்,

காவிரி புரக்கும் நாடு கிழவோனே.

அருஞ்சொற்பொருள்:

242. கூனி குனிந்து; குயம் - அரிவாள்

243. சூடு நெற்கதிர்; கோடு - மலை; பிறக்கி அடுக்கி

244. குவைஇய திரட்டிய; குப்பை குவியல்

245. தெற்று - நெருக்கம்; மூடை குதிர்

246. சாலி ஒருவகை நெல் (செந்நெல்); சிறை கொள் - வரம்பு கட்டிய; வேலி - நில அளவு (6.17 ஏக்கர்)

247.ஆயிரம் இங்கு ஆயிரம் கலத்தைக் குறிக்கிறது; (2 கலம் = 1 மூட்டை) விளையுட்டு - விளையுள்

248. புரக்கும் - காக்கும்; கிழவன் உரியவன்

 

பதவுரை:

242. கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து - குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்து

243. சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும் அறுத்த நெற்கதிர்களை மலைபோல் அடுக்கி, நாள்தோறும்

244. குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை மலைபோல் குவித்த குன்றாத நெற்குவியலை

245. கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும் குதிர்களிலே கொட்டி வைக்க இடமில்லை என்னும்படிக்கு நிறைந்திருக்கும்,                                                         

246. சாலி நெல்லின், சிறை கொள் வேலி - செந்நெல் விளைகின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலத்தில்

247. ஆயிரம் விளையுட்டு ஆக - ஓராயிரம் கலம் அளவில் நெல் விளைச்சலைத் தந்து

248. காவிரி புரக்கும் நாடு கிழவோனே. – காவிரியாறு பாதுகாக்கும் நாட்டுக்கு உரியவன் கரிகாலன்.

 

கருத்துரை:

உழவர் நெல்லை அரிவாளால் அறுத்து, நெற்கதிர்களை மலைபோல் உயரும்படி அடுக்குவர்; பின்னர் நெற்கதிர்களைக் கடாவிட்டுப் போரடித்து நெல்லைத் திரட்டுவர்; திரட்டிய நெல்லைக் குதிர்கள் நிறையும்படி கொட்டுவர்.  வேலி ஒன்றுக்கு ஆயிரம் கலம் நெல் விளையும் வளமுடையது காவிரியால் பதுகாக்கப்படும் கரிகால் பெருவளத்தானுடைய காவிரி பாயும் சோழ நாடு.

Comments

Popular posts from this blog

பொருநராற்றுப்படை – பொருட்சுருக்கம்

பொருநராற்றுப்படை– அறிமுகம்