பொருநராற்றுப்படை – பொருட்சுருக்கம்
பொருநராற்றுப்படை – பொருட்சுருக்கம்
பொருநனை விளித்தல்
இடையறாத வருவாயையும் அகன்ற இடங்களையும் உடைய பெரிய
ஊரில் நடைபெற்ற திருவிழாவுக்குச் சென்று பலவகை உணவுகளை உண்டு, விழா முடிந்த மறுநாள், உணவில் விருப்பம் இல்லாமல், வேறு இடங்களுக்குச் செல்ல விரும்பும் உபாயங்களை அறிந்த பொருநனே!
பாலையாழின்
அமைப்பு
யாழின்
குடம் (பத்தல்) மானின்
குளம்பு அழுத்திய இடத்தைப்போல
இரண்டு பக்கமும் தாழ்ந்தும்
நடுவில் உயர்ந்தும் இருக்கிறது.
விளக்கின் எரிகின்ற தீயின்
நிறத்தையுடைய தோலால் அந்தக்
குடம் போர்த்தப் -பட்டிருக்கிறது. தோலாலான
அந்தப் போர்வை நன்றாக
இழுத்துக் கட்டித் தைக்கப்பட்டுள்ளது.
கருப்பமான பெண்ணின் சிவந்த
நிறமுள்ள அழகிய வயிற்றில்
மயிர் தொடர்ச்சியாக இருப்பதுபோல்
அந்தத் தையல் இருக்கிறது.
அந்தக் குடத்தை மூடும்
போர்வையைத் தைப்பதற்கு
நண்டின் கண்களைப் போன்ற
ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த
யாழின் முன்பக்கம் எட்டாம்
நாள் நிலவுபோல் அரைவட்ட
வடிவினதாகவும், உள்நாக்கு இல்லாத
வாய்போலும் உள்ளது. யாழின்
கரிய நிறமான தண்டு
பாம்பு தலையெடுத்ததைப்போல் உள்ளது.
யாழில் உள்ள வார்க்கட்டு
கரிய நிறமுள்ள பெண்ணின்
முன்கையில் அணிந்த அழகிய
வளையல்கள் போல் உள்ளது. விரலால்
அலைத்து வாசிக்கப்படும் நரம்புகள்
தினையின் குற்றலரிசி போன்றவை. அந்த யாழின்
அழகு ஒப்பனை செய்யப்பட்ட
புதுமணப் பெண்போல் உள்ளது.
அந்த யாழின் இனிய
இசையைக் கேட்டால், ஆறலைக்கள்வர்கள் தம் கைகளில்
இருக்கும் படைக் கருவிகளைத்
தம்மை அறியாமலேயே நழுவவிட்டு விடுவார்கள்; தங்களின் அறமற்ற
செயல்களைச் செய்வதை விட்டுவிடுவார்கள்.
அந்தப் பாலையாழ் தழுவுவதற்கு
இனியது.
யாழை மீட்டிப்
பாடுதல்
அந்தப் பாலையாழின் நரம்புகளைத்
தழுவியும், உருவியும், தெறித்தும் ஒன்றைவிட்டு ஒன்றை மீட்டியும், சிறப்பான பாடல்களை அவறிற்குரிய இயல்போடு விறலி பாடுகிறாள்.
பாடினியின்
கேசாதிபாத வருணனை
விறலியின் கூந்தல் ஆற்றின் கறுமணலைப்போல் கருமையாக
உள்ளது. அவளுடைய அழகிய நெற்றி பிறைபோல் தோற்றம் அளிக்கிறது; புருவம் கொலை செய்யும் வில்லைப்போல் உள்ளது; கண்கள் குளிர்ச்சியுடையவை; வாய் இலவம் பூவின்
இதழைப்போல் அழகாகவும் சிவப்பாகவும் இருக்கிறது. அவள் வாயிலிருந்து வரும் சொற்கள் இனிமையானவையாக உள்ளன. அவள் பற்கள் முத்துகளைக் கோத்துவைத்ததைப் போல் குற்றமற்ற வெண்ணிறமாக
இருக்கின்றன. அவள் காதுகளில் உள்ள துளைகள் கத்தரியின் கைப்பிடிபோல்
உள்ளன. அவள் அணிந்திருக்கும் பாரமான குழைகள் அவள் காதுகளில்
ஊசலாடுகின்றன. மிகுந்த நாணத்தால். அவள் நிமிர்ந்து பார்க்காமல் தன் பிடரியைக் கீழே சாய்த்திருக்கிறாள். அதனால், அவள் கழுத்தைவிட அவளுடைய பிடரி நன்றாகத் தெரிகிறது. அவளுடைய பருத்த தோள்கள் அசைகின்ற மூங்கிலைப்போல் இருக்கின்றன. அவளுடைய முன்கையில் மெல்லிய மயிர்கள் உள்ளன. அவளுடைய கைவிரல்கள் மென்மையானவையாகவும், மலையின் மேலே வளர்ந்திருக்கும் காந்தள் மலர்களைப் போன்றவையாகவும் உள்ளன. அவள் விரல்களில் உள்ள வளமான நகங்கள் கிளியின் மூக்கைப்போல் உள்ளன. அவளுடைய அழகிய இளமையான, தேமல் படர்ந்த மார்பகங்கள் காண்பவர்களுக்கு வருத்தத்தை
உண்டாக்குகின்றன. அவளுடைய தொப்புள்,
நீரில் பெயர்தலையுடைய சுழியைப்போல் சிறந்த இலக்கணங்கள் நிறைந்ததாக உள்ளது. அவளுடைய இடை இருக்கிறதா அல்லது இல்லையா என்று பிறரால் உணரப்படாததாகவும், மார்பகங்களின் சுமையால் வருந்துவதாகவும் உள்ளது. வண்டுகள் மொய்த்ததுபோல, பல மணிகள் கோத்த மேகலையை அவள் அணிந்திருக்கிறாள். பெரிய பெண்யானையின் பெருமை பொருந்திய துதிக்கைபோல் நெருங்கித் திரண்ட தொடைகளை
உடையவள் அவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய, அழகிய கணைக்காலுக்கு இணையான அழகுடையது ஓடி இளைத்து நாயின் நாக்கைப் போன்ற
அவளது பாதங்கள். அரக்கை உருக்கி வைத்தாற்போல செம்மையும் வெப்பமும் உடைய
நிலத்தில் நடந்து வந்ததால் அங்குள்ள பரற்கற்களால் அவள் பாதங்கள் துன்பப்படுகின்றன. அவள் பாதங்களில்
மரல் பழுத்ததுபோலக் கொப்புளங்கள்
தோன்றியுள்ளன. அவள் உச்சி வேளையில் நடப்பதைத் தவிர்க்கிறாள். நடந்து வந்ததால் உண்டாகிய துன்பத்தை மறப்பதற்காக, பெண்மயிலின் உருவத்தைப் போல உருவமும் பெருமையும் தகுதியும் உடைய அந்த விறலி
பாடுகிறாள்.
காடுறை தெய்வத்திற்குக் கடன் கழித்தல்:
அந்த விறலி பாடிய தாளத்தோடு கூடிய
பாட்டுக்கு ஏற்ப நடை போட்டுவரும் ஆண்யானைகள் நாள்தோறும் உலாவுகின்ற வழிகளையுடைய
காட்டில் அவர்கள் (வறுமையில் உள்ள விறலியும் பாணனும் அவர்களின் சுற்றத்தாரும்) தங்கியிருக்கிறார்கள். அங்கு இலையில்லாத மரா மரத்தின் நிழலில், வெயிலினால் உண்டாகிய வருத்தத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிழல், மரா மரத்தின்மேல் வலையைப் போர்த்தியதுபோல் அடர்த்தி
இல்லாமல் இருக்கிறது. அங்குத் தங்கியவர்கள், காட்டில் உள்ள தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துமுடிதார்கள்.
பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பிறகு, பெருமை பொருந்திய செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும் முரசு முழங்கும் படையினைய முடைய
சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களும் சேர்ந்து அரசவையில் வீற்றிருக்கும்போது அவர்களது
படையானது முரசை முழக்கும்போது எழுச்சி மிக்க இசை எழும்புவது போல, தம் முரசை
முழக்கி, யாழை மீட்டிப்
பாடிவரும் சிறப்புக்குரிய கூத்தர் தலைவனே! கேட்பவர்கள் மனத்தில் நினைப்பதை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் பாட வல்லவனே! வழி அறியாமல், இந்த வழியைவிட்டு வேறொரு வழியில் போகாமல், நான் வரும் வழியில் வந்து நீ என்னைச் சந்தித்தது, நீ செய்த தவத்தின் பயனே. நான் சொல்வதை
விரும்பிக் கேட்பாயாக! புகழில் மேம்பட்டவனே!
பரிசு பெற்றோன்
பாடின முறை
உன்னையும் உன் கரிய பெரிய சுற்றத்தாரையும் நெடுநாட்களாக வருத்தும் பசி
நீங்குவதை நீ விரும்பினால், காலம் தாழ்த்தாது எழுவாயாக! நீ வாழ்வாயாக! ஏழு சுவரங்களையுடைய பாடல்களைப் பாடும் உரிமை பெற்றவனே! நானும் பழுத்த மரங்களைத் தேடி அலையும் பறவைகளைப்போல பரிசில் தருவோரைத் தேடி
அலைந்தேன். ஒருநாள், இடைவிடாது ஒலிக்கும் ஒலியையுடைய அகலமான இடத்தையுடைய
மதிலில் இருந்த வாயிலில், வாயில்காப் - போனிடம் கூறாது புகுந்தேன். அந்த வாயில் விரும்பி வந்தவர்களைத் தடுக்காத நல்ல பெரிய வாயில். வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் இளைத்த என் உடலிலிருந்து இளைப்பு நீங்கிற்று. எனது உடுக்கையின் கண் என் கைபடுதலினால் பாம்பின் படத்தின் பொறிகள் போன்ற
தழும்புகள் பெற்றிருந்தது. அந்த உடுக்கையை அடித்து, இரட்டைத் தாளத்திற்கு ஏற்ப, இருளையுடைய
விடியற்காலத்தில் ஒரு பாட்டினை நான் விரும்பிப் பாட நினைத்தேன்.
அரசன் விருந்தோம்பலின் சிறப்பு
நான் பாடுவாதற்க்கு முன், தன்னுடைய நெருங்கிய நண்பரைப்போல் அவன் என்னுடன்
உறவுகொள்ள விரும்பினான்; நான் விரும்புமாறு என்னிடம் பேசினான்; தன் கண்ணில் படும்படியாகத் தனக்கு அருகில் என்னை அமரச் செய்தான்; என்னைக் கண்ணால் விழுங்குவதுபோல் அன்போடு பார்த்தான். அவனுடைய பார்வை என் எலும்பைக் குளிரச் செய்தது. ஈரும் பேனும் இருந்து ஆட்சிசெய்து, வேர்வையால் நனைந்து, வேறு நூல் நுழைந்த தைத்தல் உடைய என் கந்தையை முழுதும்
நீக்கிப் பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நிறைந்ததும், பாம்புச் சட்டை
போன்ற மென்மையானதுமான ஆடையை அளித்து என்னை உடுக்கச் செய்தான். முகில்களோ என்று மயங்குவதற்குக் காரணமான மகிழ்ச்சியை விளைவிக்கும் மாடத்தில், ஆராய்ந்து செய்த அணிகலன்களை அணிந்த இனிய புன்னகையினையுடைய மகளிர், குற்றமற்ற பொன்னால் செய்த வட்டில் நிறைய, பல முறையும் கள்ளை ஊற்றித் தந்துகொண்டே இருந்தார்கள். என்னுடைய வழி நடந்த வருத்தம் போகும்படி நிறைய உண்டு, அந்த வருத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியோடு
நான் இருந்தேன்.
இரவில் சுற்றத்துடன் கவலையின்றித் தூங்கி எழுதல்
மேலும், கரிகாலனுடைய செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு
பக்கத்தில் நான் தங்கினேன். தவம் செய்பவர்கள் தங்கள் உடல் இறப்பதற்கு முன்பே
தவத்தின் பயனைப் பெறுவதைப் போல், நடந்து வந்த
துன்பம் என்னிடம் சிறிதும் இல்லாமல் போக்கி, கள் உண்டதனால் தோன்றிய உடல் நடுக்கம் அல்லது, வேறு மனக்கவலை சிறிதும் இல்லாமல் மயங்கி எழுந்தேன்.
காலையில்
அரசவைக்குச் செல்லுதல்
முந்திய நாள்
மாலையில் என்னிடத்தில் இருந்த சொல்ல முடியாத வறுமையையும், காலையில் நான் நறுமணமுள்ள பொருள்களை அணிந்திருப்பதால் என்னைக் கண்டோர்
மயங்குமாறு வண்டுகள் மொய்க்கின்ற நிலையையும் நினைத்து என் நெஞ்சம் கனவோ என்று
கலங்கியது. அப்பொழுது, வலிய வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த என் உள்ளம்
மகிழ, அரச முறைமையைக் கற்ற இளைஞர்கள் எம் வரவை மன்னனுக்குத்
தெரிவித்தார்கள்.
அரசனை அணுகுதல்
எங்கள் வரவைப் பற்றி அந்த இளைஞர் கூறியவுடன், மன்னன் “விரைவாக அழைத்து வாருங்கள்” என்று கூறினான். நாங்கள் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றவுடன், ‘வருக வருக' என்று உரக்கச் சொல்லி எங்களை அழைத்தான். மன்னனைக் காணும்பொழுது நாங்கள் செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்து
முடித்தோம்.
உணவு கொடுத்து ஓம்பிய முறை
உணவு உண்ணும் நேரம் அறிந்து, அறுகம்புல்
கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட இறைச்சியின்
நன்றாக வேகவைத்த தொடைக்கறியைக் கொடுத்து ‘உண்பாயாக' என்று அவன் எங்களை வற்புறுத்தினான். பிறகு, இருப்புக் கம்பியில் கோத்துச் சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய
தசைத் துண்டுகளைக் கொடுத்தான். வாயின்
இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் மாற்றி மாற்றி ஒற்றியெடுத்து, அவற்றின் வெப்பத்தைக் குறைத்து உண்டு களித்தோம். புழுக்கினவும் சுட்டனவுமாகிய உணவுப் பண்டங்களை நாங்கள் இனி வேண்டாம் என்ற பொழுது, சுவையான வெவ்வேறான பல வடிவினையுடைய தின்பண்டங்களைத் தந்து, எங்களை இருக்கச் செய்தான். மார்ச்சனை அமைந்த
முழவின் தாளத்திற்கு ஏற்ப பண் அமைந்த சிறிய யாழையுடைய, ஒளிபொருந்திய நெற்றியையுடைய விறலியர் ஆடினார்கள். இவ்வாறு மகிழ்ச்சியைத் தரும் கள்ளை உண்டு உண்டு பல நாட்களைப் போக்கினோம். ஒரு நாள், ’சோற்று உணவை உண்ணுங்கள்’ என்று அவன் வேண்டிக்கொள்ள, (முல்லை) அரும்பைப் போன்ற அரிசிச் சோற்றையும், பருக்கைக் கற்கள் போன்று, நன்கு பொரித்த
பொரிக்கறிகளையும் கொடுத்து உண்ணச் செய்தான்.
கழுத்துவரை நிரம்பும்படி அவற்றை விழுங்கினோம். இவ்வாறு, அவனோடு பழகி, இனிதாக அங்கே தங்கி இருந்தபொழுது, கொல்லை நிலத்தில் உழுத கலப்பையின் முனையைப்போல் எங்கள் பற்கள் பகலும் இரவும்
இறைச்சியைத் தின்றதால் முனை மழுங்கின. மூச்சு விடுவதற்கும் நேரமில்லாமல். நிரம்ப உணவைத் தின்றதால், நாங்கள் உணவையே
வெறுத்தோம்.
ஊருக்குச் செல்லப் பரிசிலன் விரும்புதல்
ஒரு நாள், ‘கோபித்து எழுந்த பகைவரிடம் திறைகொள்ளும் முறைகளில்
தேர்ச்சிபெற்ற செல்வா! நாங்கள் எம்முடைய பழைய ஊருக்குப் புறப்பட்டுப் போகப்
போகிறோம்’ என்று மெதுவாகச் சொன்னோம்.
அரசன் பிரிய மனமின்றிப் பரிசு வழங்கி அனுப்புதல்
‘இவ்வளவு சீக்கிரம் எங்களைவிட்டுப் போகின்றீரோ?’ என்று கோபித்தவனைப்போல், எமக்கு
வருத்தத்தைச் செய்த பார்வையுடன் கேட்டான்.
‘உடுக்கை போன்ற அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய
கன்றுகளுடன், பெண்யானைகளையும், அவற்றோடு கூடின ஆண்யானைகளையும் நீங்கள் விரும்பிய மற்றவற்றையும் ஏற்றுக்
கொள்வீராக' என்று தான் அறிந்த அளவில் அளித்தான். நானும் நான் அறிந்த அளவில் எனக்கு வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு, என் வறுமை முற்றிலும் அற்றுப்போக வந்தேன்.
கரிகால் வளவனது சிறப்புக்கள்
உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகனான சிறுவன் கரிகாலன், முருகனைப்போல்
கோபத்தையுடைய தலைவன். அவன் தன் தாய்
வயிற்றில் இருந்தபொழுதே அரசுரிமை பெற்றுப் பிறந்தவன். அவன் வலியறியாத பகைவர்கள் அவன் ஏவல் கேட்டு நடக்க, அவன் ஏவல் கேட்க மறுத்தவர்களின் நாடுகளில் உள்ளவர்களின் மனக்கவலை பெருக, அவன் கடல்மேல் ஒளி பரப்பி எழுகின்ற கதிரவன்போலத் தோன்றுவான். அவன் பிறந்து தவழத் தொடங்கிய நாள் தொடங்கி, சிறந்த தன் நாட்டைத் தோளில் தாங்கி வளரச் செய்பவன்.
வெண்ணிப் போர் வெற்றி
யாளி என்னும் விலங்கின் குட்டி, எமனைப் போன்ற வலிமையினால் கர்வம் கொண்டு, தாயின் முலைப்பாலைக் குடிக்கும் பருவத்திலேயே விரைவாகப் பாய்ந்து, தன் முதல் வேட்டையிலேயே யானையைக் கொல்லும் இயல்புடையது. அதைப்போல, கரிய பனைமரத்தின் குருத்தோலையைத் தலையில் அணிந்த
சேரனையும், கரிய கிளைகளையும் இரம்பத்தின் வாயைப் போன்ற
விளிம்பையும் உடைய வேப்ப மரத்தின் அழகிய தளிராலான மாலையையும் நிமிர்ந்த பெரிய
தலையில் மேலாகத் தோன்றும்படி சிறப்பாகச் சூடிய
பாண்டியனையும் ஒரே போர்க்களத்தில் அழியும்படி வெண்ணி
என்கிற ஊரில் போரிட்டு வென்றவன் கரிகாற்சோழன். அவன், பகைவர்கள் அஞ்சுவதற்குரிய வலிய முயற்சியுடையவன்; கண்நிறைந்த அழகிய ஆத்தி மாலையை அணிந்தவன். அவனுடைய திருவடி நிழலின் பக்கத்தை அணுகி, நெருங்கி வணங்கி, அவன் முன்னே நிற்பீர்களானால்
கரிகாலனது கொடையின் சிறப்பு
பசு தன் கன்றை விருப்பத்தோடு பார்ப்பதைப்போல் உம்மை விரும்பிப் பார்த்து, உம் கையில் உள்ள இசைக் கருவியின் ஒலியைக் கேட்டு முடிப்பதற்கு முன்னரே, விரைந்து, பாசியின் வேர்போல் கிழிந்து, அழுக்குடன் உள்ள உங்கள் உடைகளை நீக்கி, தூய குஞ்சம் உள்ள கரையையுடைய பட்டாடைகளை அளிப்பான். ’விரும்பிய மட்டும் உண்பாயாக’ என்று கூறிப்
பொற்கலத்தில், பூமணம் வீசும் தெளிந்த கள்ளைப் மேலும்மேலும்
வார்த்துத் தருவான். நாள்தோறும், போதுமென்ற அளவுக்குக் குடித்த பிறகு, பொன்னாலான தாமரையை உங்கள் தலையில் சூட்டுவான். பொற்கம்பிகளால் தொடுத்த முத்துமாலையைப் பாடினிக்குக் கொடுப்பான்.
தன் காலால் ஏழடி பின்னே வந்து, தந்தத்தாலான கொடுஞ்சியையுடைய, வெண்ணிறமான நான்கு
குதிரைகள் பூட்டிய தேரைத் தருவான். பெருமைக்குரிய யாழ்ப்பாணர் -களுக்கு அளிக்கும் பரிசுகளைப் போன்ற பரிசுகளை
அளிப்பான். நீர்வளம் பொருந்திய மருத நிலம் சூழ்ந்த குடியிருப்பு -களையுடைய
நல்ல பல ஊர்களையுடைய நாடுகளையும், அச்சம் தரும்
ஓட்டத்தையுடைய யானைகளையும் அளிப்பான். இவ்வாறு ஓயாமல் பரிசளிப்பான். நீங்கள் பெற்ற
பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக உமது பயணத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நீங்கள்
முடிவுகட்டினால், அவன் வருத்தப்பட்டு, நிலையில்லாத இவ்வுலகின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து, உங்களைச் செல்ல விட மாட்டான்.
சோழ நாட்டின் வளமும் வனப்பும்
ஒல் என்னும்
ஓசையோடு அலைகள் புரளும்
கரிய கடலின் கரைகள்
சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்
சோழநாடு உள்ளது. அங்கு,
மருத நிலத்தில் உள்ள
ஒவ்வொரு மா அளவிலான
நிலங்கள்தோறும், நெல்லும், தென்னையுமுடைய
குளிர்ந்த சோலைகளில் உள்ள
குடியிருப்புகளில் நெற்குதிர்கள்
இருக்கும். அந்தக் குடியிருப்பகளில் வாழும் மக்கள்
உதிரத்தோடு கலந்த சோற்றைக்
காக்கைக்குப் படையலாக அளிப்பர்.
அந்தச் சோற்றை விழுங்கிய
காக்கை, அந்த உணவை
வெறுத்து, நொச்சி மரத்து
நிழலில் தங்கி, நெய்தல்
நிலத்தில் முட்டையைப் பொரித்த
ஆமையின் குஞ்சைப் பிறகு
உண்ணலாம் என்று பாதுகாத்து
வைக்கவும், மருதநிலத்து இளைய
மகளிர் நெய்தல் நிலத்து
மணற்குன்றுகளில் விளையாடவும்,
பகைமைகொண்ட முதியோர் நீதி
வேண்டி அவைக்களம் புகும்பொழுதிலேயே தம் உள்ளத்து
மாறுபாட்டைப் போக்கும்படியாகவும் ஆட்சி
செலுத்துபவன் கரிகாலன்.
குறிஞ்சி
நிலப்பறவையாகிய மயில், மருதநிலத்துக்
காஞ்சி மரத்திலும் மருதமரத்திலும் இருந்து, பசிய
பாகற்பழத்தில் கொத்துக்கொத்தாக உள்ள
சிவந்த சுவைகளையுடைய பழத்தைத்
தின்று ஆரவாரிக்கும். அங்கு,
கரும்பை அறுப்பவர் -களும், வயல்களில்
நெல்லை அறுவடை செய்யும்
உழவர்களும் எழுப்பும் ஒலி
மிகுதியாக இருப்பதால், அங்கிருந்து
அந்த மயில் அகன்று,
வறண்ட இடத்தில் வளரும்
அடும்பும், படர்கின்ற பகன்றையும்,
தளிர்களையுடைய புன்கும், தாழ்ந்த
சோலை -களும், ஞாழலும் ஏனை
மரங்களும் நிறைந்த இடத்திற்குச்
செல்லும். பின்னர் அந்த
இடத்தையும் வெறுத்து, அங்கிருந்து
அகன்று, செம்முல்லை, காந்தள்,
முல்லை, தேற்றா, கொன்றை
மற்றும் காயா மலர்களும்
உள்ள முல்லைக் காட்டுக்குச்
செல்லும். அந்த
இடத்தில் இருப்பதும் சலித்துப்
போனால், அந்த மயில்
சுறா மீன்கள் திரியும்
கடற்கரைக்குச் செல்லும். அந்தக்
கடலில், இறால் மீன்களைத்
தின்ற நாரைகளின் கூட்டம்
பூக்களையுடைய புன்னையின் கிளைகளில்
தங்கும். புன்னையின் கிளைகளில்
தங்கிய நாரைகள், ஓங்கி
வீசும் கடலலைகளின் ஆரவாரத்திற்கு
அஞ்சிப் பனை மரத்தின்
மடலில் சென்று தங்கும்.
கொத்துக்கொத்தாகக் காய்த்த தென்னை
மரங்களின் காய்க்குலைகளும், கொழுவிய
காந்தளும், மலர்ந்த சுரபுன்னையும்,
உடுக்கையின் ஓசை போன்ற
ஓசையையுடைய பேராந்தையும் உடைய
நெய்தல் நிலத்து ஊர்களில்
யாழிசை போன்ற வண்டுகளின்
இன்னிசையைக் கேட்டு, அவ்விசைக்கேற்ப மணல்மேடுகளின் மேலே,
மயில் தோகையை விரித்து
ஆடும்.
நில மயக்கமும் நல் ஆட்சியும்
குறிஞ்சி நிலத்து
மக்கள் தேனையும் கிழங்கையும்
நெய்தல் நிலத்துக்குக் கொண்டுசென்று விற்று,
பண்டமாற்றாக மீனின் நெய்யையும்
கள்ளையும் வாங்கி வருவர்.
மருத நிலத்தைச் சார்ந்தவர்கள்
இனிய கரும்பையும் அவலையும்
குறிஞ்சி நிலத்துக்குக் கொண்டு
சென்று விற்று, பண்டமாற்றாக
மானின் தசையையும் கள்ளையும்
வாங்கி வருவர். குறிஞ்சிப்
பண்ணை நெய்தல் நிலத்தவர்
பாடுவர். நெய்தல் நிலத்து
மலரால் தொடுத்த மாலையைக்
குறிஞ்சி நிலத்தவர் சூடுவர்.
முல்லை நிலத்து மக்கள்
மருதப்பண்ணைப் பாட, மருத
நிலத்திலுள்ள பாடகர்கள் நீல
நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த
பலவகையான காட்டுநிலத்தைக் கொண்டாடுவர்.
முல்லைக் காட்டுக் கோழிகள்
மருத நிலத்துக் கதிர்களைக்
கொத்தித் தின்னும். மருத
நிலத்து மனைக் கோழிகள்
முல்லை நிலத்தில் விளைந்த
தினையைத் தின்னும். மலையில்
உள்ள குரங்குகள் நெய்தல்
நிலத்துக் கழியில் மூழ்கும்.
நெய்தல் நிலத்துக் கழியில்
திரியும் நாரைகள் மலையில்
தங்கும். குளிர்ந்த ஊர்களையுடைய
நிலப்பகுதிகளையுடைய நான்கு
வகையான நாடுகள் சேர்ந்த
இடம் சோழ வளநாடு.
அவ்வாறு இவ்வுலகத்தைக் குற்றமின்றிப்
பாதுகாப்பவன் கரிகாலன். தன்னுடைய குடை
ஒன்றே எங்கும் பரவ,
அனைவரும் அவனுடைய ஆணை
ஒன்றையே கூற, பெருமையுடன்
ஆட்சி புரிந்த மிக்க
அன்பையும் அறத்தோடு கூடிய
ஆட்சித் திறத்தை அறிந்த
செங்கோலை உடைய அந்தக்
கரிகாலன் வாழ்வானாக! வெல்லுகின்ற
வேற்படையை உடைய மன்னன்
அவன்.
காவிரியின் வெள்ளச் சிறப்பு
பகை மன்னர்கள்
நடுங்கும்படி விளங்குபவன் கரிகாலன்.
பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு
பல கதிர்களைப் பரப்புவதால்
தோன்றும் வெப்பத்தால், கஞ்சங்
குல்லை தீயலாம்; மரங்களின்
கிளைகள் தீக்கு இரையாகலாம்;
பெரிய மலைகளில் அருவிகள்
கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப் போகலாம்;
மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை
மறக்கலாம் பெரும் பஞ்சம்
உண்டாகியதால் நற்பண்புகள் இல்லாமற்
போகலம். அத்தகைய வறட்சியான
காலத்திலும், காவிரி ஆறு
நறைக்கொடியும், நரந்தம் புல்லும்,
அகிலும், சந்தனமும் ஆகிய
சுமைகளைத் துறைகள்தோறும் இறக்கி
வைத்துவிட்டு, இளைப்பாற்றிக்கொள்ளும். நுரையைத் தலையிலே
உடைய, ஆரவாரத்தையுடைய காவிரி
ஆற்று நீர், குளத்திலும்
மடுக்களிலும் புகுந்தோறும், அங்குள்ள
நீரில், மகளிர் விரைவாக,
மூழ்கி விளையாடுவர்.
காவிரி நாட்டு வயல் வளம்:
உழவர் நெல்லை அரிவாளால் அறுத்து, நெற்கதிர்களை மலைபோல் உயரும்படி அடுக்குவர்; பின்னர் நெற்கதிர்களைக் கடாவிட்டுப் போரடித்து நெல்லைத் திரட்டுவர்; திரட்டிய நெல்லைக் குதிர்கள் நிறையும்படி கொட்டுவர். வேலி ஒன்றுக்கு
ஆயிரம் கலம் நெல் விளையும் வளமுடையது காவிரியால் பதுகாக்கப்படும்
கரிகால் பெருவளத்தானுடைய காவிரி பாயும் சோழ நாடு.
Comments
Post a Comment